நெல்லை மாநகர பகுதியான அருகன்குளம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  அதன்படி நெல்லை சரக குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் அருகன் குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக அங்குள்ள வயல்வெளியில் ரேசன் அரிசி பதுக்குவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கும் தீவிர சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு வயல்வெளி பகுதியில் பிளாஸ்டிக் சாக்கு பைகளில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்தது தெரிய வந்தது.


அதனை சோதனை செய்த போது அனைத்து மூட்டைகளிலும் பொதுமக்களுக்கு விநியோகிக்கக்கூடிய ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது. சுமார் 566 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் சுமார் 23 டன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  தொடர்ந்து இது குறித்து குடிமைப் பொருட்கள் வளங்கள் குற்றப்புலனாய்வுத்துறை காவல் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அருகன் குளத்தை சார்ந்த சின்னதுரை மற்றும் அவரது தம்பி கணேசன் ஆகியோர் சேர்ந்து அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.  மேலும் பதுக்கி வைத்திருக்கும் ரேசன் அரிசியை கேரளாவில் உள்ள நிஜாம் என்பவருக்கு விற்பதற்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.


மேலும் இதில் தொடர்புடைய கலைஞர் என்ற கருணாநிதி, மகாராஜன், சாலை மாரியப்பன், சப்பானி முத்து, கணேசன், மூக்கன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 566 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் இருந்த 2050 கிலோ மொத்தமாக 23 டன்  ரேஷன் அரிசியை புட்செல் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட கலைஞர் என்ற கருணாநிதி, மகாராஜன், சாலை மாரியப்பன், கணேசன், சப்பாணி முத்து, மூக்கன் ஆகியோரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அருகிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கள் சம்பந்தமாக தீவிரமாக ரோந்து  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை அருகே வயல் வெளிகளில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.