ரேசன் அரிசி கடத்தலும் கைதும்:


கடந்த 16.02.2024 அன்று தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக வாகன தணிக்கை செய்யப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஈச்சர் வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 4 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வாகனத்தை ஓட்டி வந்த கோவில்பட்டியை சேர்ந்த பட்டுராஜன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில்  நெல்லை மாவட்டம்  நாரணம்மாள்புரத்தை சேர்ந்த மகாராஜன், தொல்காப்பியர் தெருவை சேர்ந்த மாடசாமி ஆகியோரிடமிருந்து ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை பணங்கூட்டபுறை பகுதியை சேர்ந்த அன்வர்கான் என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் விதமாக கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்தது.


இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்து செய்து பட்டுராஜன் என்பவரை தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து இதில் தொடர்புடைய மகாராஜன் மற்றும் மாடசாமி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு உட்படுத்தினர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த அன்வர்கானை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் தற்போது தனிப்படை போலீசார் அன்வர்கானை கைது செய்தனர். தொடர்ந்து அன்வர்கானுக்கு சொந்தமான தென்மலையில் உள்ள ரேசன் அரிசி பதுக்கி வைக்கும் குடோனில் சோதனை செய்தபோது தமிழக அரசால் வழங்கப்படும்  ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


அண்டை மாநிலத்தவர் கள்ளச்சந்தைகாரர் என சிறையில் அடைப்பு:


இந்த நிலையில் அன்வர்கான் பொது விநியோக திட்ட ரேசன் அரிசியை கடத்தி குற்ற செயலில் ஈடுபட்டும் அதனால் கொள்ளை லாபம் சம்பாதித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தாலும் இவர் மீது கேரளாவில் ஆறு குற்ற வழக்குகளும், குழித்துறை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையில் தலா ஒரு வழக்கும் இருந்து வரும்  நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் அறிவுறுத்தலின்படி மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் விஜயகார்த்திக்ராஜ் மற்றும் நெல்லை சரக  காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவின்படி காவல் ஆய்வாளர் ரமேஷ்ராஜா பரிந்துரையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் கள்ளச்சந்தை மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின்படி கள்ளச்சந்தைக்காரர் என தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி தற்போது அன்வர்கான் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  தென்மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றங்களுக்காக அண்டை மாநிலத்தை சேர்ந்த நபர் மீது முதல்முறையாக கள்ளச்சந்தை மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


காவல்துறை எச்சரிக்கை:


மேலும் இதே போல அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். அதேபோல கடந்த இரண்டு மாதங்களில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சரகத்தில் 6 நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்புகாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.