உத்தரப்பிரதேசத்தில் ஒருவரை அவருடைய 3 நண்பர்கள் சேர்த்து கொலை செய்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பான போலீசார் விசாரணையில் அதிர வைக்கும் வகையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

Continues below advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் நவீன் என்ற நந்து எனப்படும் 35 வயது நபர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவருக்கு சக ஆட்டோ ஓட்டுநர்களான பவன், சாகர், நசீம் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். நல்ல நட்பில் இருந்த வந்த இவர்கள் தற்போது கொலையாளிகளாக மாறியுள்ளனர். வாழ்க்கையில் பணக்காரர் ஆக வேண்டும், பொருளாதார வசதி உயர வேண்டும் என நினைப்பவர்கள் ஏராளம். அதற்காக கடவுள் வழிபாடு, ஜோதிடம் போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார்கள். அதுதொடர்பான நபர்களையும் சந்தித்து உரையாடுவார்கள். 

நண்பனை பலி கொடுக்கலாமா?

அப்படியாக நவீன் அடிக்கடி டெல்லியில் உள்ள ஒரு சாமியாரை சந்திப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக தனது நண்பர்களான பவன், சாகர் மற்றும் நசீம் ஆகியோரிடம் தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நவீன் மீண்டும் அந்த சாமியாரை சந்தித்து பற்றி நண்பர்களிடம் கூறியுள்ளார்.

Continues below advertisement

அப்போது நீங்கள் பணக்காரர் ஆக வேண்டும் என்றால் உங்களுக்கு நெருக்கமான ஒருவரை தியாகம் என்ற பெயரில் கொலை செய்ய உயிர்ப்பலி கொடுக்க வேண்டும் என கூறியதாக சொல்லியுள்ளார்.இதனைக் கேட்டு நண்பர்கள் 3 பேர் மிரண்டு போயினர். காரணம் அந்த சாமியாரிடம், இதற்கு ஒரு நண்பரை கொன்றால் சரியாகுமா என நவீன் கேட்க அவரும் ஆமாம் என கூறியுள்ளார். அவ்வளவு தான். பவன், சாகர் மற்றும் நசீம் ஆகியோர் உஷாரானார்கள். 

உயிருடன் எரித்துக் கொலை

இவர்கள் கூடி பேசிய அன்று மாலையில் 4 பேரும் சாகரின் வீட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது நவீனிடம், நீ எப்படி சாமியாரிடம் நண்பனை பலி கொடுக்கலாமா என கேட்பாய் என கேள்வியெழுப்ப அது அவர்களுக்குள் வாக்குவாதமாக மாறி பின் கைகலப்பு ஏற்பட்டது. ஒருவேளை சாமியார் சொன்னபடி கொலை செய்யத்தான் இந்த சண்டை நடக்கிறதோ என பயந்து போன்ற 3 நண்பர்களும் நவீனின் தலையிலும் முதுகிலும் சிறிய எரிவாயு சிலிண்டரால் தாக்கி கொலை செய்தனர்.

இதனையடுத்து அவர் உடலை ஒரு போர்வையில் சுற்றி, அதை அவரது ஆட்டோ ரிக்‌ஷாவில் வைத்து எடுத்துச் சென்றனர். ட்ரோனிகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசியாபாத்தின் ஒரு வெறிச்சோடிய பகுதிக்கு எடுத்து சென்று அங்கு நவீன் உடலை ஆட்டோவுடன் சேர்த்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட இரவு நவீன் மூன்று நண்பர்களுடன் மது அருந்தியிருந்ததை கண்டுபிடித்து சாகர் மற்றும் பவனை கைது செய்தனர். தப்பியோடிய நசீம் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.