ஆந்திராவில் மகளின் திருமணத்துக்கு தடையாக இருந்ததால், மாப்பிள்ளையின் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது எனப் பார்க்கலாம்.

Continues below advertisement

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்

ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம், வேணிகண்ட்லா கிராமத்தில் தான் கடந்த செப்டம்பர் 7ம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பெடககானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை செய்ததில் அது தாதி கோட்டேஸ்வரம்மா என தெரிந்தது. அவரின் வீட்டில் தங்க நகைகளும் பணமும் காணாமல் போனதால், திருட்டு சம்பவத்தை தடுக்க முயன்றதால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணையைத் தொடங்கினார். இதில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் பார்த்தனர். மற்றொரு பக்கம் கோட்டேஸ்வரம்மாவுக்கு நெருக்கமானவர்களிடமும் விசாரணை நடைபெற்றது. சிசிடிவி காட்சிகளில் திருட வந்ததற்கான எந்தவித அடையாளமும் தெரியவில்லை. இதனால் போலீசார் சற்று குழம்பி போயினர். 

Continues below advertisement

மகளின் காதலுக்காக நடைபெற்ற கொலை

இதனிடையே கோட்டேஸ்வரம்மா குடும்ப உறுப்பினர்களிடம் நடந்த விசாரணையில் போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதாவது கோட்டேஸ்வரம்மா 20 ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அவருடைய மகளை திருமணம் செய்துக் கொடுத்த நிலையில் மகன் சாதிக் உடன் வாழ்ந்து வந்தார். சாதிக் மெக்கானிக் வேலை பார்த்து வரும் நிலையில், அவன் அதே பகுதியைச் சேர்ந்த மரியாகுமரி என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளான். அப்பெண்ணை திருமணம் செய்யும் முனைப்பில் இருந்த சாதிக்கிற்கு மரியாகுமரி சம்மதம் தெரிவித்து விட்டார்.

ஆனால் சாதியை காரணம் காட்டி கோட்டேஸ்வரம்மா இந்த திருமணத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கடும் ஆத்திரமடைந்த மரியாகுமரி, தன் மகளின் திருமணத்திற்கு தடையாக இருக்கும் கோட்டேஸ்வரம்மாவை கொலை செய்ய முடிவெடுத்தார். இதற்கான திட்டம் ஒன்றை ஒருவார காலமாக தீட்டி வந்தார். இந்த கொலைக்கு துணையாக இரண்டு இளைஞர்களை தன்னுடன் வைத்துக் கொண்டார். தன் திட்டத்தின்படி சம்பவம் நடந்த நாளில் மரியாகுமரி கோட்டேஸ்வரம்மாவின் வீட்டுக்கு முதலில் செல்ல, அடுத்த சில நிமிடங்களில் இரு இளைஞர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். கோட்டேஸ்வரம்மாவின் வாயைப்பொத்தி கை, கால்களை கட்டிய நிலையில் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் இந்த கொலையை திருட்டு சம்பவமாக காட்ட முடிவு செய்து பணம், நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதற்கு முன்னால் இரண்டு முறை மரியாகுமாரி கோட்டேஸ்வரம்மாவை கொலை செய்ய முயற்சி செய்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.