தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த வாரம் ஒரு திருமண விழா நடந்து உள்ளது. அப்போது அந்த திருமண மண்டபத்தின் மணமகள் அறையில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற விசாரணை நடத்தி உள்ளனர்.




தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சுமதி(வயது 42) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக இரவு 10 மணிக்கு மேல் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தார்களாம். அப்போது சுமதியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்ட சுமதி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உள்ளார்.




தொடர்ந்து போலீசார் தன்னை தாக்கியதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் தெரிவித்து உள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். போலீஸ்நிலையத்துக்கு வரும் மக்களை கனிவோடு நடத்த வேண்டும், விசாரணையின்போது யாரையும் துன்புறுத்தக்கூடாது என்று ஏற்கனவே போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதனை மீறி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண் சுமதியை, பெண் போலீசார் துன்புறுத்தியதும், வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் பெண்ணை இரவு 10 மணிக்கு மேல் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.




இதனை தொடர்ந்து முத்தையாபுரம் போலீஸ் ஸ்டேசன் உதவி ஆய்வாளர் முத்துமாலை, பெண் போலீஸ் ஏட்டு மேக்சினா, பெண் போலீசார் உமா மகேசுவரி, கல்பனா ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்க தவறியதாக தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு முருகன் ஆயுதப்படைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.


இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், எந்த சம்பவம் தொடர்பாகவும் புகார்களை பெறாமல் விசாரிக்ககூடாது என்ற அவர், புகார் மனு ரசீதும் அளிக்காமல் பெண்ணை அழைத்து சென்று இரவு நேரத்தில் விசாரணை நடத்தி உள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்நிலைய போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.


சாத்தான்குளத்தில் தந்தை-மகனை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலையத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.