கோவில்பட்டியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் சொந்த மாமனாரை லாரி கொண்டு மோதி கொலை செய்த மருமகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்டவர்
கோவில்பட்டி விநாயகா நகரைச் சேர்ந்தவர் பி.கே.துரை(57). இவர் கடந்த 1-ம் தேதி இரவு எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது குமாரகிரி விலக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிய, போலீஸார் கோவில்பட்டி சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில், ஒரு லாரி அதிவேகமாக கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரத்தை நோக்கி சென்றது. அதே லாரி, சிறிது நேரத்தில் மீண்டும் கோவில்பட்டியை நோக்கி சென்றது பதிவாகி இருந்தது. இந்த வழக்கை விசாரிக்க எட்டயபுரம் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் துரைச்சாமி, தனிப்பிரிவு தலைமை காவலர் செல்லச்சாமி, காவலர்கள் சிவசுப்பிரமணியன், சசிகுமார், பாண்டியராஜா உள்ளிட்டோர் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், உடனடியாக எட்டயபுரம் அருகே தோழ்மாலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் நாகராஜ்(43) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இதில், உயிரிழந்த துரை மகளை திருமணம் செய்த கோவில்பட்டி விநாயகா நகரைச் சேர்ந்த உடையார் தலைவர் என்ற உதயகுமார் என்ற சின்ன குமாரராஜா(38) என்பவர் ஏற்பாட்டில் அதிவேகமாக லாரியை இயக்கி மோட்டார் சைக்கிள் மீது மோத விட்டு துரையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜ், சின்னகுமாரராஜா, லாரி ஓட்டுநர் கயத்தாறு அருகே பன்னீர்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சிவராம்(21) ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், சின்னகுமாரராஜாவுக்கும், அவரது மாமனார் துரைக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் அவரை கொலை செய்ய முடிவெடுத்த சின்னகுமாரராஜா, தோழ்மாலைபட்டியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் நாகராஜ் மற்றும் ஓட்டுநர் சிவராம் ஆகியோருடன் சேர்ந்து கோவில்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் நின்று திட்டம் தீட்டி உள்ளார். இதில், எட்டயபுரம் அருகே குமாரகிரி விலக்கை கடந்தவுடன் காட்டுப்பகுதி உள்ளது. அப்பகுதியில் வைத்து, அவர் மீது லாரியை மோதவிட்டு, கொலை செய்துவிடுவது. அது விபத்து வழக்காக போய்விடும் என முடிவெடுத்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த 1-ம் தேதி மாலை துரையை தொடர்பு கொண்ட சின்னகுமாரராஜா, எட்டயபுரத்தில் ஒருவர் பணம் தர வேண்டும். அதனை சென்று வாங்கி வாருங்கள் என அனுப்பினார். இதனை நம்பிய அவர் எட்டயபுரத்துக்கு சென்றார். பின்னர் அவரை இளம்புவனத்துக்கு வரும்படி கூறியுள்ளார். இதனால் துரை இளம்புவனத்துக்கு வந்துள்ளார். அப்போது லாரி ஓட்டுநரிடம் கூறி, மோட்டார் சைக்கிள் பதிவு எண், துரையின் அடையாளங்களை கூறி அனுப்பினார். ஓட்டுநர் சிவராம், துரையை இளம்புவனம் பகுதியில் அடையாளம் கண்டார். இதையடுத்து, துரையை ஊருக்கு புறப்பட்டு வரும்படி கூறியுள்ளார். அவர் குமாரகிரி அருகே காட்டுப்பகுதியில் வந்தபோது, பின்னால் லாரி கொண்டு மோதி துரையை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார், விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.