திருவாரூர் மாவட்டத்தில் கவர்ச்சிகர விளம்பரம் செய்து களவாணித்தனத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் அருகே உள்ள புலிவலம் பகுதியில் பிளாக் அண்ட் ஒயிட் என்கிற கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தை சதீஷ் என்பவர் நடத்தி வருகிறார். இவரிடம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த பால் பாண்டி (எ) பவுல் பாண்டி (வயது-29) மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் கீழத்தெருவை சேர்ந்த பொன்னுசாமி (வயது-30)- ஆகிய இருவரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களிடம் தரமான செங்கல் உள்ளது எனக் கூறியுள்ளனர். இதனை நம்பிய சதீஷ் செங்கல் அனுப்புவதற்கு ஒப்பந்தத்தின் பேரில் ரூ.1,08,000/- ஐ G-Pay மூலமாக அனுப்பியுள்ளார். இதனையடுத்து பேசியபடி செங்கல் வரவில்லை என்றும் அதே நேரத்தில், இருவரையும் தொடர்பு கொண்டு கேட்டபோது உரிய பதில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த சதீஷ் இதுகுறித்து திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு சென்று இருவரையும் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் ஒன்று சேர்ந்து செங்கல் விற்பனை நிறுவனம் வைத்துள்ளதாக கூறி விளம்பரப்படுத்தியதாகவும் இது தொடர்பாக செங்கல் உற்பத்தியாளர்களிடமும் தொடர்பு வைத்துக்கொண்டு தங்களிடம் செங்கல் கேட்கின்ற பொதுமக்கள் மற்றும் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனங்களிடம் பணத்தை ஜி - Pay மூலமாக பெற்றுள்ளதும் செங்கல்லுக்கு உரிய தொகையை உற்பத்தியாளர்களுக்கு கொடுக்காமலும் தொடர்ந்து ஏமாற்றி வந்ததும் தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக பல புகார்கள் விருதுநகர், நெல்லை, மதுரை மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள நிலையில் திருவாரூர் தாலுகா போலீசார் பால்பாண்டி மற்றும் பொன்னுசாமியை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், ஆன்லைன் மூலமாக போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம், தொலைபேசி மூலமாக பொதுமக்களை அழைத்து ஏமாற்றும் செயலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் இலவசமாக கொடுக்கிறோம் என யாரேனும் கூறினால் உடனடியாக அது உண்மையா என கண்டறிந்து செயல்பட வேண்டும், அதில் போலித்தன்மை தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறையினரை அணுகி புகார் தெரிவிக்க வேண்டும், அப்படி செய்தால் உடனடியாக குற்றவாளிகளை எளிதில் கண்டறிவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து இதேபோன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இதே போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபடுவது தெரிந்தால் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.