தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும் மேலும் போதைப்பொருள் வெளிமாநில லாட்டரிகள் உள்ளிட்டவைகளை தடுக்கும் வகையில் அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

 


 

அதன் அடிப்படையில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் மற்றும் வெளிமாநில லாட்டரி விற்பனை செய்பவர்களை கைது செய்யும் வகையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் தஞ்சை சரக டிஐஜி உத்தரவின் அடிப்படையில் வெளிமாநில லாட்டரி விற்பனை செய்தவர்களை  தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதை தடுத்திட தஞ்சாவூர் சரக டி.ஜ.ஜி. பிரவேஷ் குமார் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் மகேந்திரன், கந்தசாமி அகியோர் தலைமையில் கண்ணன், இளையராஜா சுந்தர்ராமன் விஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.



 

இந்த நிலையில் தமிழக அரசால் தடை செய்யபட்ட வெளி மாநில ஆன்லைன் லாட்டரிகளை போலியாக தயாரித்து கணினி மூலம் பதிவிறக்கம் செய்து, தனியாக சாப்ட்வேர் தயார் செய்து வாட்ஸ்-அப் குழு அமைத்து பொதுமக்களை ஏமாற்றி மோசடியாக பணம் பறிக்கும் எண்ணத்தில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில்  விற்பனை செய்து வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 



 

இதில் திருவாரூர் பெரிய மில் தெருவை சேர்ந்த சரவணன் (48), கொரடாச்சேரி வடக்குமாங்குடியை சேர்ந்த குமரேசன் (52), கூத்தாநல்லூர் வாழச்சேரியை சேர்ந்த விஜய்குமார் (35), மன்னார்குடி பைங்காநாடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணா (32), கூத்தாநல்லூர் பொதக்குடியை சேர்ந்த மணிகண்டன் (30) மற்றும் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மீரான் (37), திருச்சி தொட்டியம் காட்டுபுத்தூரை சேர்ந்த சண்முகவேல் (27) மற்றும் ஒரு பெண் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு கட்டுகள், 12 லட்சம் ரொக்கம் 4 மடிகணினி, 14 செல்போன் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.