திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பகுதி அன்மருதை கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் வயது (69). இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் . இவர் கடந்த 25-ஆம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் திருமணம் முடிந்து 26-ஆம் தேதி அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று அறையில் சென்று பார்த்தார். அப்போது இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த கோயிலுக்கு சொந்தமான 4 சவரன் நகைகள் உட்பட மொத்தம் 10 சவரன் நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருடு போனதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து முனிரத்தினம் பெரணமல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆய்வாளர் கோமளவள்ளி மற்றும் கைரேகை நிபுணர்கள், காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பீரோ உள்ளிட இடங்களில் கைரேகை நிபுணர்கள் கைரேகையை சேகரித்தும் பின்னர் வீட்டின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். திருடுபோன இடத்தில் சேகரித்த கைரேகையும் மற்றும் சிசிடிவி காட்சியில் பதிவான நபரும் அதே பகுதியை சேர்ந்த பாமக மாவட்ட இளைஞரணி செயலாளர் ராதாகிருஷ்ணன் (38) என்பவருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்தான் முனிரத்தினம் வீட்டில் நகைகளை திருடி சென்றார் என்பது உறுதிசெய்யப்பட்டது
அதனைத்தொடர்ந்து 5 பேர்கொண்ட தனிப்படை ஒன்று அமைத்து பாமக நிர்வாகியை தேடிவந்தனர். இந்நிலையில் பாமக நிர்வாகி ராதாகிருஷ்ணனை தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் நகைகளை எனது விவசாய நிலத்தில் உள்ள பம்பு செட்டில் வைத்துள்ளேன் என்று சொன்னதாக தெரியவருகிறது. பின்னர் அங்கிருந்து 10 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் மீட்டு, காவல்நிலையத்திற்கு அழைத்துச் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ”இதுபோல மூன்று வீடுகளில் திருடினேன், அதனை வைத்து ஆடம்பரமா ஊர் சுத்துவேன் என்றும், எனக்கு வேலைக்கு போவது பிடிக்காது” என்றும் கூறியுள்ளார்.
அதன்பிறகு அவரை செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போளூர் சிறையில் அடைத்தனர். கைதான ராதாகிருஷ்ணன் கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி சார்பில் மேலானூர் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் பாமக நிர்வாகி கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.