திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த வீரப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (41). இவர் கூலிதொழில் செய்து வந்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் பலாமரத்தூர் கிராமம் தோப்பூரில் உள்ள அவரது தங்கை வீட்டிற்கு சென்று உள்ளார். பின்னர் அவர் அன்று மாலை 6 மணியளவில் அங்கிருந்து திரும்ப வீட்டிற்கு புறப்பட்டு வந்துள்ளார். ஆனால் அவர் வீடுக்கு வந்து சேரவில்லை. இது குறித்து அவருடைய உறவினர்கள் பல இடத்தில் தேடியுள்ளனர் ஆனால் திருப்பதியை எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து திருப்பதியின் மகன் வீரமணி ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காணாமல் போன திருப்பதியின் மோட்டார் சைக்கிள் சமீபத்தில் செங்கம் துக்காபேட்டையில் உள்ள சைக்கிள் நிறுத்தத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலையில் பலாக்கனூர் கிராமத்தை சேர்ந்த மணி என்ற ராமசாமி (32) என்பவர் புலியூர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சரண் அடைந்து காணாமல் போனதாக கூறப்படும் திருப்பதியை நான் தான் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் அவரை ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், சரண் அடைந்த மணியும், காணாமல் போனதாக கூறப்படும் திருப்பதியும் நண்பர்கள். மணி திருமணமானவர். இருவரும் குடிப்பழக்கம் கொண்டவர்கள். இவர்கள் இருவரும் அவ்வபோது ஒன்றாக இணைந்து மது அருந்தி வந்துள்ளனர்.
ஒரு நாள் மணி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். சென்ற வேளையை முடித்து விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளர். அப்போது மணியின் மனைவி உடன் திருப்பதி கள்ளத் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தெரிந்து கொண்ட மணி இருவரையும் எச்சரித்துள்ளார். இருப்பினும் அவர்கள் கள்ளத் தொடர்பை விடமால் தொடர்பில் இருந்து வந்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மணி, சம்பவத்தன்று மது போதையில் இருந்த திருப்பதியை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். அதன் பிறகு திருப்பதியின் உடலை மணி வீட்டின் பின்புறம் புதைத்து உள்ளார். காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்து பயந்து போய் சரண்டைந்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் நேற்று திருப்பதியின் உடல் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் பிரேதபரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணி என்ற ராமசாமியை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் ஜமுனாமரத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.