திருவண்ணாமலையில் காலி இடங்களில் கூடாரம் அமைந்து பிளாஸ்டிக் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களில் ஒவ்வொரு பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இந்த பிளாஸ்டிக் பூக்களை மொத்தமாகவும் விற்பனை செய்து வருகின்றனர். அந்த நபர்களை சேர்ந்த மைசூர் மாண்டியா பகுதியை சேர்ந்த ஆர்.ஜே.ராகுல் வயது (24), பிரபு வயது (34), சோயங்கி பவன் வயது (22), அவரது தம்பி சோயங்கி ராகுல் வயது (20), ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டராம்பட்டு பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோர் வைத்துள்ள பூங்காவனம் என்பவரின் கடைக்கு சென்று உள்ளனர். அப்போது அந்த கும்பல் தங்களுக்கு கூடாரம் அமைக்கும் போது தங்க புதையலாக குண்டு மணி மாலைகள் கிடைத்ததுள்ளது என்று கூறியுள்ளனர். நாங்கள் தற்போது சொந்த ஊருக்கு செல்ல உள்ளதால் தங்க குண்டு மணிமாலையை நல்ல விலைக்கு விற்றுவிட்டு சென்று விடலாம் என்று பூங்காவனத்திடம் அந்த கும்பல் தொிவித்துள்ளனர். 


 




 


மேலும் அவர்கள் வைத்து இருந்த ஒரு மாலையில் இருந்து 2 குண்டு மணிகளை பூங்காவனம் கண் எதிரிலேயே பிய்த்து பூங்காவனத்திடம் வழங்கி உள்ளனர். அந்த 2 குண்டு மணிகளை அவர் சோதித்து பார்த்ததில் அது தங்கமாக இருந்து உள்ளது. உடனடியாக பூங்காவனம் அந்த கும்பலிடம் குண்டு மணி மாலைகளுக்கு விலை பேசியுள்ளார். பேரம் பேசப்பட்டு கடைசியாக 2 லட்சம் ரூபாய்க்கு முடிந்தது.அதனைத்தொடர்ந்து கர்நாடக மாநில கும்பல் 2 லட்சத்துடன் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு வந்து பணத்தை கொடுத்துவிட்டு குண்டு மணி மாலைகளை வாங்கி செல்லுங்கள் என்று தெரிவித்து உள்ளனர். இதனை நம்பி பூங்காவனம் கடந்த 28-ந்தேதி 2 லட்சத்தை எடுத்து கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த அவர்கள் 4 நபர்களும் பணத்தை பெற்று கொண்டு மாலைகளை கொடுத்து சம்பவ இடத்தில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். மாலை பெற்றுக்கொண்ட பூங்காவனம் மாலையை சோதனை செய்து பார்த்ததில் அந்த மாலைகள் கவரிங் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் அவர்களின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர்.


 




இந்த விசாரணையில் அவர்கள் மற்றொரு நபரை ஏமாற்ற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அந்த நபருக்கு தொடர்பு கொண்டு அவர்கள் கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றும் கர்நாடக மாநில கும்பல் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். காவல்துறையினர் ஆலோசனையின் படி அந்த நபர் அவர்கள் 4 பேரையும் நேற்று மாலை திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு வரவழைத்தார். அவர்கள் 4 பேரும் கவரிங் குண்டு மணி மாலைகளை எடுத்து கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அங்கு பதுங்கி இருந்த காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட ஆர்.ஜே.ராகுல், சோயங்கி பவன், சோயங்கி ராகுல், பிரபு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள கவரிங் குண்டு மணி மாலைகள் மற்றும் 52 ஆயிரம் ரொக்கம் ஆகியவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.