நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையைச் சுற்றிலும் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் கிரிவலப் பாதையில் சாமியார்கள் போர்வையில் போலி சாமியார்கள் உலா வருகின்றனர். இவர்கள் அனைவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் கஞ்சா பிடிப்பதும் என பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது இதன் அடிப்படையில் திருவண்ணாமலை சமுத்திரம் காலனி மற்றும் கல் நகர் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதா, மதன், சக்திவேல், சகுந்தலா, சுகன்யா, சுபாஷினி, தனுஷ் சூர்யா ஆகிய 8 நபர்களும் திருவண்ணாமலை நகரில் பல்வேறு இடங்களில் மறைமுகமாக கஞ்சாவை மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கடந்த இரண்டு தினங்களாக நடத்திய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு 8 பேரையும் பல்வேறு இடங்களில் மடக்கி பிடித்து கைது செய்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து 11 கிலோ 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்ததுடன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இரண்டாவது நாள், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேலுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் செங்கம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் சந்தேகம் ஏற்படும் விதமாக செங்கத்தில் அதிக அளவில் இளைஞர்கள் கூடும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். உடனடியாக அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திருவண்ணாமலை கல்நகர்ப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா வயது (18), (17) வயதுடைய இளைஞர், சஞ்சய் வயது(22) ஆகிய 3 இளைஞர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தலைவி கைது
பின்னர் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் நபரை பற்றி காவல்துறையினர் முறையில் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை கல்நகர் பகுதியில் உள்ள சகுந்தலா வயது (75) என்பவர் செங்கம் பகுதியில் கொடுத்து அனுப்பியதாக காவல்துறையினர் விசாரணையில் மூவரும் கூறியுள்ளார். பின்னர் காவல்துறையினர் சகுந்தலாவைக் கைது செய்து அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இவர்கள் ஆந்திரா பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருவண்ணாமலை நகர் மற்றும் செங்கம் பகுதியில் விற்பனை செய்து வருவதும் இவர்களுக்கு ஆகாஷ் என்பவர் ஆந்திரா சென்று கஞ்சா வாங்கி வந்து இவர்களிடம் அளிப்பதும் தெரியவந்தது. ஆகாஷை கைது செய்ய காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றபோது ஆகாஷ் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாக உள்ளார். மேலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள ஆகாஷை தேடி வருகின்றனர். இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் கஞ்சா போதைக்கு அடிமையாக உள்ளதும்,திருவண்ணாமலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.