பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு(ஐடி விங்க்) மாநில செயலாளர் வசந்த் பாலாஜி என்பவர், ஆன் லைன் மூலம் தேனி போலீசாருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பிரபல தொலைக்காட்சி நடிகையும், விசிக திருப்போரூர் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜியின் மனைவியும், மருத்துவருமான டாக்டர் ஷர்மிளா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து, போலியான தொலைக்காட்சி கார்டு ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தவறான கருத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாகவும், மத்திய நிதி அமைச்சர் மீது அவதூறு பரப்பியதாகவும், தொடர்ந்து இது  போன்ற கருத்துக்களை அவர் பரப்பிய வருவதாகவும் புகார் அளித்தார். 





சைபர் க்ரைம் விசாரணை தொடக்கம்!


சம்மந்தப்பட்ட புகார், எஸ்.பி., அலுவலகம் மூலம், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு நடந்த விசாரணையில் அது ‛சைபர் க்ரைம்’ பிரிவில் வருவதால், அந்த புகாரை சைபர் க்ரைமுக்கு மாற்றப்பட்டது. அதன் படி, தேனி சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி இந்த புகாரை விசாரித்தார். அதன் படி, புகார் அளித்த பாஜக ஐடி விங்க் மாநிலச் செயலாளர் வசந்த் பாலாஜியிடம் இன்று சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.


போலீஸ் சொல்வது என்ன?


விசாரணையில், டாக்டர் ஷர்மிளாவின் சர்ச்சை பதிவுகளை போலீசாரிடம் வசந்த் பாலாஜி ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து, டாக்டர் ஷர்மிளாவை தேனி சைபர் க்ரைமில் ஆஜராக, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, தேனி சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகியிடம் கேட்ட போது, ‛‛பாஜக ஐடி விங்க் பொறுப்பாளர் வசந்த் பாலாஜியிடம் வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம். டாக்டர் ஷர்மிளாவை தேனி சைபர் க்ரைமில் விசாரணைக்கு ஆஜராக கூறியுள்ளோம். அவரது ட்விட்டர் பதிவுகளையும் ஆய்வு செய்து வருகிறோம்,’’ என்றார்.


மனுதாரர் சொல்வது என்ன?


புகார் குறித்து, பாஜக ஐடி விங்க் மாநில செயலாளர் வசந்த் பாலாஜியிடம் கேட்ட போது, ‛‛பிரபல தொலைக்காட்சியின் பெயரில் வரி விதிப்பு தொடர்பான போலியான கார்டு ஒன்றை, தனது ட்விட்டரில் பதிவிட்ட டாக்டர் ஷர்மிளா, மத்திய நிதியமைச்சரை கடுமையாக விமர்சித்திருந்தார். தொடர்ந்து அவர் அத்துமீறியும், போலியான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வந்ததால், ஆன்லைன் மூலம் போலீசாரிடம் புகார் அளித்தேன். என்னிடம் விசாரணை நடத்தினார்கள்; ஷர்மிளா ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார். 






யார் இந்த டாக்டர் ஷர்மிளா?




டாக்டர் ஷர்மிளா, டாக்டர் மாத்ருபூதத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் பணியில் அறிமுகமானார். 1997 ல் இருந்து சினிமாவில் நடிகையாக நடித்து வரும் அவர், 1999ல் இருந்து சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார். சன்டிவியில் தற்போது பரபரப்பாக போய் கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் ‛செண்பகம்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் டாக்டர் ஷர்மிளா, ட்விட்டர் பக்கத்தில் பாஜக.,வை கடுமையாக சாடி வந்தார். விசிக ஆதரவாளரான இவரின் பெரும்பாலான பதிவுகள், கடும் விமர்சனத்திற்கும், வாதத்திற்கு வருவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் தான், அவர் மீது பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.