கூடலூர் அருகே தனியார் தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக டிரம்மில் சுமார் 100 லிட்டர் அளவு சாராய ஊறல் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இதுதொடர்பாக 3 பேரை கூடலூர் போலீசார் கைது செய்தனர்.


100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்


தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் ( கே.எம். பட்டி)  தனியார் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த மொக்கையத்தேவர் மகன் சரவணன்(45) காவலாளியாக வேலைசெய்து வருகிறார். இந்நிலையில் இந்த தோட்டத்தில் சாராயம் தயாரிக்க ஊறல் போட்டிருப்பதாக கூடலூர் காவல் ஆய்வாளர் வனிதாமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் வனிதாமணி தலைமையில் எஸ்ஐ தீபக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். 




அப்போது அங்கு தோட்டத்தின் ஒரு முலையில், சாராயம் காய்ச்சுவதற்காக டிரம்மில் சுமார் 100 லிட்டர் அளவு சாராய ஊறல் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார்கள் அங்கிருந்த காவலாளி சரவணனை கைது செய்து கூடலூர் வடக்கு காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த குமரேசன்(40) மற்றும் ராஜேந்திரன்(55) சாராய ஊறல் போடுவதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து குமார் மற்றும் ராஜேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.




பண்ணை வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான சாமி சிலைகள், பொருட்களை  திருடிய 6 பேர் கைது.


மதுரை நேரு தெருவை சேர்ந்த சோமசுந்தரம் மனைவி தேன்பழம் (வயது 66). இவர் டயர் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ளது. அந்த வீட்டில் அவருடைய மகன் வசித்து வந்தார். 6 மாதத்துக்கு முன்பு அவர் வியாபார பணிக்காக நாகர்கோவிலுக்கு சென்று விட்டார். இதனால் பண்ணை வீடு பூட்டியிருந்தது. தேன்பழம் அவ்வப்போது பண்ணை வீட்டுக்கு சென்று பார்வையிட்டு வந்தார். அதன்படி நேற்று முன்தினம் அவர் பண்ணை வீட்டை பார்க்க வந்தார். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் மாயமாகி இருந்தன.




வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கண்ணன், ராதையின் பித்தளை சிலை, மீன் சிலை, கொம்பு போன்ற சிலைகள் 2 பிரீஷர் பாக்ஸ், ஒரு பிரிட்ஜ், 3 ஏ.சி. ஆகிய பொருட்கள் திருடு போயிருந்தன. திருடுபோன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் தேன்பழம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த திருட்டை மர்ம நபர்கள் கும்பலாக வந்து நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் அறிவுறுத்தலின் படி  தனிப்படை போலீசார் மூலம் பொருட்களை திருடிய கோடாங்கி பட்டியை சேர்ந்த ரமேஷ், சங்கர் , அருண்பாண்டி,சிலம்பரசன்,ஆனந்த் , ஜெகதீசன் ஆகிய 6 பேரை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.