சேலத்தில் கல்லூரி மாணவி தலை மீது கல்லை போட்டு கொலை. கொலை செய்த வாலிபரை விரைந்து கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கூடமலை கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் ரோஜா தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கடம்பூர் பகுதியை சேர்ந்த சாமிதுரை என்ற வாலிபர் ரோஜாவை காதலிப்பதாக கூறி, ரோஜா சென்ற கல்லூரி பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவி ரோஜா, பெற்றோரிடம் தெரிவித்து நிலையில் வாலிபரை கடுமையாக கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ரோஜாவின் சகோதரி நந்தினி திருமணத்திற்கு, அழைப்பிதழ் கொடுப்பதற்காக உறவினர் வீட்டிற்கு பெற்றோர்கள் சென்றிருந்த நிலையில், ரோஜா தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட சாமிதுரை வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ரோஜா தப்பி ஓட முயன்றபோது தலையில் ஆறு முறை கல்லைக்கொண்டு அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக உறவினர்கள் கெங்கவல்லி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக உள்ள வாலிபர் சாமிநாதனை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, ரோஜா வீட்டில் தனிமையில் இருப்பதை தெரிந்துகொண்டு முதலில் ரகளையில் ஈடுபட்ட சாமிநாதன் பின்னர் தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று கூறி, பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயற்சித்துள்ளார்.
உடனே அருகிலிருந்த சகோதரி நந்தினி தண்ணீரை எடுத்து ரோஜாவின் மீது ஊற்றி உள்ளார். மேலும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ரோஜாவை துரத்தி சென்றபோது, தடுமாறி கீழே விழுந்த நிலையில் தலையின் மீது கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு தப்பி உள்ளார். எனவே காவல்துறையினர் விரைந்து வாலிபர் சாமிநாதனை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரோஜாவிற்கு நடந்த நிலை இனி எந்தப் பெண்ணிற்கும் நிகழக் கூடாது என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
வரும் திங்கட்கிழமை அக்காவிற்கு திருமணம் இருந்த நிலையில் தங்கை காதலை மறுத்ததால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.