மயிலாடுதுறை கனரா வங்கி பேருந்து நிறுத்தத்தில் திருவிழந்தூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் அவரது ஏழு வயது பெண் குழந்தை சுபிக்ஷா உடன் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது குழந்தையின் கழுத்தில் இருந்த அரை சவரன் தங்க சங்கிலியை காணவில்லை. அதனைத் தொடர்ந்து, அது குறித்து அருகில் இருந்த காவல்துறையினரிடம் தினேஷ்குமார் புகார் செய்தார். மேலும் பேருந்தில் அவர் பின்னால் அமர்ந்திருந்த சந்தேகம் படும் பெண்மணி குறித்து சில அடையாளங்களை கூறியுள்ளார்.
தினேஷ்குமார் கூறிய அடையாளங்களை வைத்து காவல்துறையினர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்மணியை தேடினர். அப்பொழுது பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நடந்து சென்ற ஒரு பெண்மணியை சந்தேகப்பட்டு விசாரணை செய்ததில் பேருந்தில் குழந்தையிடம் இருந்து திருடிய அரை சவரன் தங்க நகை அவரிடம் இருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து உடனடியாக செயினை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மதுரை பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பது கண்டறிந்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த மயிலாடுதுறை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் வழக்கில் காவல்துறையினர் போலியாக வாக்குமூலம் தயார் செய்ததாக உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் நடந்த விபத்தில் உயிரிழந்த கணேசன் வழக்கில் காவல்துறையினர் பொய்யான வாக்குமூலம் பெற்று போலியாக கையெழுத்திட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தள்ளதாக குற்றம்சாட்டி இறந்த கணேசனின் உறவினர் ராஜேஷ் மற்றும் உறவினர்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாவிடம் புகார் மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அவர்கள் அளித்த மனுவில் தென்னாம்பட்டினம் ஊராட்சி கீழமூவர்க்கரை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் கடந்த ஆறாம் தேதி திருவெண்காடு மேலவீதியில் நடந்து சென்ற போது இரண்டு கலவை இயந்திரங்களை இழுத்து வந்த டாட்டா ஏசி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. கணேசன் ஆபத்தான நிலையில் சுயநினைவின்றி சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த திருவெண்காடு காவல்துறையினர் உயிரிழந்த கணேசனிடம் வாக்குமூலம் பெற்றதாகவும், அதில் கணேசன் தனக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும், தான் நடந்து செல்லும் போது தனது கவனக்குறைவால் விபத்தில் சிக்கிக் கொண்டதாகவும், விபத்தை ஏற்படுத்திய டாட்டா ஏசி ஓட்டுநர் ராதாநல்லூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று குறிப்பிட்டதாகவும் வாக்குமூலகடிதத்தில் கையோப்பம் இட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இறந்து போன கணேசனிடம் பெற்ற கையெழுத்து போலியானது என்றும், இளங்கலை வணிகவியல் படித்த கணேசன் ஆங்கிலத்தில் கையெழுத்திடுபவர் என்றும் காவல்துறையினர் உண்மைக்கு புறம்பாக பொய்யான காரணங்களை கூறி முதல் தகவல் அறிக்கையை தவறாக பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இறந்த கணேசனின் உடலை பெறாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். காவல்துறையினர் உரிய விசாரணை செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும், பொய்யான தகவல் அறிக்கை ஜோடித்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த கணேசனின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியின் பேரில் உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட கணேசனின் உடலை பெற்று சென்றனர். காவல்துறையினர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.