திண்டுக்கலில் விடாக்கொண்டன் கொடாக்கொண்டன் கொள்ளை கும்பலை போலீசார் கூண்டோடு அள்ளிவந்தது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. ஒரு புதிருக்கு விடை தேடி சென்றவர்களுக்கு 19 புதிர்களுக்கான விடை கிடைத்தது இந்த வழக்கில் கூடுதல் சிறப்பாகும். இந்த ஆண்டு முதலே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. எல்லாமே வெவ்வேறு இடங்களில் நடந்தவையாகும். போதிய தடயங்கள் சிக்காததால் போலிசாருக்கு குழப்பமே மிஞ்சியது. சமீபத்தில் திண்டுக்கல் தாலுகா ஸ்டேஷன் எல்லைக்குள் தாடிக்கொம்பு, சென்னமநாயக்கன்பட்டி, குள்ளனம்பட்டி போன்ற புறநகர்ப் பகுதிகளில் 3 கொள்ளைகள் அடுத்தடுத்து நடந்தன. போலிசாருக்கு சவாலான இந்த கொள்ளை சம்பவத்தில் தனிக்கவனம் செலுத்த திண்டுக்கல் எஸ்பி ரவளிப் பிரியா உத்தரவிட்டார்.

 ஜூலை 2ஆம் தேதி இரவு தாடிக்கொம்பு சக்தி முருகன் நகரில் ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை நடந்தது. தாலிச்செயின் உட்பட 15 பவுன் நகைகளை திருடிச் சென்றது அந்த கும்பல். போலீசார் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை துவங்கினர் . முந்தைய பல குற்ற வழக்குகளில் கிடைத்த கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். இதில் ஒரு ரேகை மட்டும் வடமதுரை அருகே கிடைத்த கைரேகையுடன் ஒத்து போனது. சம்பவங்கள் நடந்த பகுதி கேமரா காட்சிகள் அலைபேசி சிக்னல்களை ஆய்வு செய்தனர் அலைபேசி சிக்னல்கள் கை கொடுக்காததால் போலீசார் சோர்ந்தனர். இருப்பினும் கைரேகை கேமரா பதிவுகளின் படி குற்றவாளிகளை போலீசார் ஓரளவு அனுமானித்தனர் அதை உறுதிப்படுத்த சிக்கிய கைரேகை நபரின் அலைபேசி சிக்னலை ஆய்வு செய்தனர். தேனியில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அலைபேசி ஆப் செய்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த நாளும் நேரமும் தாடிக்கொம்பு சம்பவத்தோடு ஒத்துப்போனது தன்னை புத்திசாலியாக கருதிய திருடன் அலைபேசி ஆப் செய்து விட்டு மீண்டும் திருட திண்டுக்கல் வந்துள்ளான். இதனைக் கணித்த போலிசார் அவனோடு சேர்ந்த கும்பல் தேனி மாவட்டம் காமாட்சிபுரம் தாடி சேரி பகுதியைச் சேர்ந்தது என உறுதி செய்தனர்.

 இரவோடு இரவாக சந்தோஷ் என்பவனை நன்கு கவனித்து விசாரித்ததில் ஒப்புக்கொண்டான். கூட்டாளியை கைது செய்ய முயன்றபோது சிலர் ஒரு அரசியல் கட்சியுடன் சேர்ந்து எதிர்த்து போராட்டம் செய்தனர். போலீசார் எடுத்துக்கூறியும் ஒப்புக்கொள்ளவில்லை. எஸ்பி ரவிப்பிரியா கும்பலை கைது செய்வதில் உறுதியாக இருந்தார் . ஒருகட்டத்தில் இடையூறை மீறி கூட்டாளிகள் அர்ஜுனன், ஐயப்பன் சிக்கினர். 

அவர்களை விசாரித்ததில் அந்த கும்பல் அம்மி, ஆட்டுக்கல் குத்துபவர், தள்ளுவண்டி வியாபாரம் செய்வது போல ஒரு பகுதியை இரண்டு மாதங்களாவது நோட்டமிட்டும் அருகில் உள்ள வீடுகள் அங்கு இருப்போர் விவரங்களை சேகரிப்பது முகமூடி டிரவுசர் அணிந்து சம்பவம் செய்யும் அந்த கும்பல் ஒரே தெருவில் ஐந்து வீடுகள் ஆவது திருட முயற்சிப்பர். இதில் குறிப்பிடத்தக்க ஆட்கள் இல்லாத வீடுகளில் திருடுவதில்லை. இடத்தை முடிவு செய்து இரவு ஏழு மணிக்கெல்லாம் அங்கு ஆஜராகி இரவு முழுவதும் திருடுவர்.2:00 மணிக்கு மேல் முகத்தை மூடிக்கொண்டு ஆயுதங்களோடு வீட்டிற்குள் புகுந்து விடுவர் வீட்டில் இருப்போரை கத்தியை காட்டி மிரட்டி அமரச்செய்து நிதானமாக கொள்ளையடிப்பது  தடையங்களை விட்டுவைக்காமல் சுருட்டி விடுவர்.

 இவர்கள் சிக்கிய இதற்கு முக்கிய காரணம் இவர்கள் ஒரே ஸ்டைலில் நடத்திய கொள்கைகள்தான் திண்டுக்கல்லில் 5  கொள்ளை சம்பவங்கள் வேடசந்தூரில் 3 கொள்ளை சம்பவங்கள் வத்தலகுண்டு, நிலக்கோட்டையில் 8 சம்பவங்கள்,உசிலம்பட்டியில் 2 என 19 இடங்களில் நடந்த கொள்ளைகள் ஒரே விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தன. கொள்ளையடித்த நகைகளை விற்க எளிதாக இருக்கும் என்பதால் கொள்ளை அடித்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றிவிடுவர்.

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், கொள்ளையின் போது முரட்டுத்தனமாக நடக்கும் கும்பலை கைது செய்ய முற்படும் போது பல்வேறு சிக்கல்கள் கிளம்பின. புகார் அளித்தவர்களுக்கு பதில் கூற வேண்டும் நகையை பறிமுதல் செய்ய வேண்டும் என கூறியபோது நாங்கள் அவர்களை மிரட்டியதாக சித்தரித்து கட்சியினருடன் சேர்ந்து எங்களை கண்டித்து போராட்டம் நடத்தினர் . அவர்கள் வீட்டில் நடந்து இருந்தால் இப்படி எதிர்ப்பாளர்களா எனவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை எனில் போலீசார் எப்படி குற்றவாளிகளை பிடிக்க முடியும் என்று புலம்புகின்றனர் போலிசார்.