மாவட்ட ஆட்சியர் பங்களாவை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்த பதிவாளர்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பங்களாவை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்த பதிவாளர் - பணியிடை நீக்கம் செய்து பதிவுத்துறை நடவடிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பங்களாவை தனிநபருக்கு பத்திரப்பதிவு செய்த பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து பதிவுத்துறை அதிகாரி நடவடிக்கை. தமிழகத்தில் போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் மூலம் மோசடி பத்திரங்களை பதிவு செய்தல், ஒரே இடத்தை பலருக்கு பத்திரப்பதிவு செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் இங்கு ஒரு நபர் மாவட்ட ஆட்சியர் பங்களாவையே தனிநபர் ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். இதையும் முறையாக விசாரிக்காமல் அரசு அதிகாரி ஒருவர் பத்திரப்பதிவு செய்து கொடுத்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே திருவங்கூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர், கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள ஒரு இடத்தை கள்ளக்குறிச்சி மருத்துவமனை ரோட்டில் வசிக்கும் மற்றொரு நபருக்கு கிரையம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார். கடந்த 7.12.22 அன்று கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் எண்-2 அலுவலகத்திற்கு அவர்கள் சென்றனர். பின்னர் அங்கு பணியில் இருந்த சார் பதிவாளர் கதிரவன் மூலம் அந்த இடம் கள்ளக்குறிச்சி மருத்துவமனை ரோட்டில் வசித்து வந்த நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அந்த இடத்தின் மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தது. இதனால் சந்தேகமடைந்த மாவட்ட பதிவாளர் ரூபியாபேகம் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அந்த இடத்தின் பட்டா, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தபோது, அவர்கள் கிரையம் செய்தது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பங்களாவின் ஒரு பகுதி என்று தெரியவந்தது. அதாவது, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடமான மாவட்ட ஆட்சியர் பங்களாவை சார்பதிவாளர் கதிரவன் பத்திரப்பதிவு செய்து கொடுத்தது தெரிய வந்தது. இதுபற்றி மாவட்ட பதிவாளர், சென்னை பதிவுத்துறை தலைவருக்கு புகார் செய்தார். இதையடுத்து ஆட்சியர் பங்களாவை தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் கதிரவனை பணியிடை நீக்கம் செய்து பதிவுத்துறை தலைவர் சிவனருள் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்