தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் வளையல் கடையில் வளையல் வாங்க வந்தவர்களுக்கும், கடையில் இருந்த உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இப்பிரச்சினை தொடர்பாக கடையில் நடந்த சண்டை காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பு அளித்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 


 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதி நகரைச் சேர்ந்த செந்தில்குமரன் என்பவர் கிருஷ்ணன் கோவில் அருகே வளையல் கடை நடத்தி வருகிறார். கடந்த 13ஆம் தேதி நடராஜபுரம் தெருவினை சேர்ந்த பிரியா என்பவர் வளையல் வாங்க சென்றுள்ளார். அப்போது கடையில் இருந்த செந்தில்குமரன், அவரது தந்தை லட்சுமணன் ஆகியோர் இருந்துள்ளனர். வளையல் எடுக்கும் போது, லட்சுமணன், பிரியாவை வளையல் எடுக்க வேண்டாம் வெளியோ போ என்று சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் பிரியா மற்றும் செந்தில்குமரன், லட்சுமணன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து பிரியா கடையில் இருந்து வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது.



                         

பின்னர் சிறிது நேரத்தில் பிரியா மற்றும் அவரது உறவினர்கள் 6 பேர் கடைக்கு வந்து பிரியாவை எதற்காக பிரியாவை வெளியே போக சொன்னீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். செருப்பு, கடையில் இருந்த பொருள்கள் என கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து தாக்கி கொண்டனர். மேலும் ஒரு சிலர் வேஷ்டியும் இந்த சண்டையில் உருவப்பட்டது. செல்போன்கள் பறந்தன. ஒரு போர்களம் போல அந்த கடை காட்சியளித்தது. இதையெடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இரு தரப்பினரையும் சமாதனப்படுத்தினர்.



             

இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் பிரியா மற்றும் அவரது உறவினர்கள் என 7 பேர் மீதும், செந்தில்குமரன் மற்றும் அவரது தந்தை லெட்சுமணன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் 12ஆம் தேதி கடையில் நடைபெற்ற தாக்குதால் காட்சியின் சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.