புதுச்சேரி குருமாம்பேட் அமைதி நகர் பகுதியில் வசித்து வரும் பரமேஸ்வரி என்பவரது 17 வயது மகள் கல்லூரி படித்து வந்தார். இவரது தந்தை இறந்துவிட்டார். சிறுமி தனது தாயுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் தாய் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் சிறுமியின் வீட்டில் புகுந்து சிறுமியை கட்டாய பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி தொடர்ந்து பலமுறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ளார்.




இதனால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட சிறுமி கேரளாவில் உள்ள தனது சித்தி வீட்டிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததன் மூலம் சிறுமி பல முறை பாலியல் வன்முறை செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது நடந்த சம்பவத்தைக் கூறி கதறி அழுதுள்ளார். இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உடனடியாக சிறுமியின் சித்தி, திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து கேரள போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்த புதுச்சேரியை சேர்ந்த அருண்குமார் என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




இது குறித்து சிறுமியின் தாய் புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் குற்றவாளிக்கு ஆதரவாக தற்போது பா.ஜ.க அமைச்சரவை பட்டியலில் இடம்பிடித்துள்ள எம்.எல்.ஏ சாய் சரவணகுமார் செயல்பட்டு வழக்குப் பதிவு செய்யாமல் தடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இன்று, போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்,




இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் தாய் பரமேஸ்வரி, எனது மகளை வலுக்கட்டாயமாக சீரழித்து அவரது உயிரிழப்புக்கு காரணமாக அருண்குமாரை கேரளா நீதிமன்றத்திலேயே கடுமையான தண்டனையை கொடுத்து தண்டிக்க வேண்டும். மேலும், குற்றவாளி அருண் குமாருக்கு ஆதரவாக அவரது மாமாவும், தற்போது பா.ஜ.க சார்பில் அமைச்சர் பட்டியலில் இடம் பிடித்துள்ளவருமான சாய் சரவணகுமாரும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டள்ளதாகவும், மேலும் ரவுடிகளை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் தனது மகள் உயிரிழப்புக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட சாய் சரவணகுமாருக்கு புதுச்சேரியில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.