இதயம் நல்லெண்ணெய் உடலுக்கு நல்லது, இதயத்திற்கு நல்லது என விளம்பரம் வருவதை நாம் பார்த்திருப்போம். இதயம் நல்லெண்ணெய் தான் நமக்கும் நல்லதுன்னு ஒரு கும்பல் அதை குறிவைத்து திருடுவதை யாராவது கேட்டிருப்பீர்களா?  ஆமாம், இதயம் நல்லெண்ணெய்யை மட்டும் குறிவைத்து திருடும் ’லாக்கர் குரூப்’ தற்போது சிக்கியுள்ளது. அதென்ன லாக்கர்? பொதுவாக பொருட்களை பாதுகாக்க நாம் பயன்படுத்தும் பொருளுக்கு பெயர் தான் லாக்கர். இவர்களோ தாங்கள் திருடும் பொருளை பாதுகாக்க அல்லது பதுக்க பயன்படுத்துவது பாவாடையைத்தான். பாவாடையில் லாக்கர் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் நல்லெண்ணெய் பாக்கெட்டுகளை அள்ளிக்கொண்டு வருவதுதான் ‛லாக்கர் குரூப்’-இன் பிரதான பணி. சரி, எப்படி இந்த பாவாடை லாக்கர் குரூப் உருவானது? எங்கு செயல்படுகிறது? எப்படி பிடிபட்டது? என்பதை ஆழமாய் சென்று தேடியபோது, பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. 




மதுரை மாவட்டத்தின் கடைகோடியான உசிலம்பட்டி பேரையூர் சாலையில் தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்படுகிறது. சம்பவத்தன்று மூன்று பெண்கள் அந்த கடைக்குள்ளே வருகின்றனர். மூவரும் நேராக சென்றது சமையல் எண்ணெய் இருக்கும் பகுதிக்கு. பலவகை பிராண்டுகள் இருக்கும் அந்த ரேக்கில், இதயம் நல்லெண்ணெய் இருக்கும் பகுதியை அடைகிறார்கள் அந்த மூவரும். 




நீண்டநேரமாக அந்த பகுதியில் நின்றுகொண்டு ஒருவருக்கொருவர் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். சில நிமிடங்கள் கழித்து, மூன்று பெண்களில் ஒருவர் தங்களின் ஆடைக்குள் (அப்படி தான் அவர்கள் அழைக்கிறார்கள்) பல இதயம் நல்லெண்ணெய் பாக்கெட்டுகளை அள்ளி அமுக்குகிறார் ஒரு பெண்மணி. அவரது ஆடையில் அடைத்து ஃபுல்லானதும், இரண்டாவது பெண்ணின் லாக்கரை நிரப்பும் பணி துவங்குகிறது. நம்மை யாரும் கவனிக்கவில்லை என்கிற தைரியத்தில் அடுத்தடுத்து லாக்கரை நிரப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் அந்த பெண்கள். 




திடீரென கடையின் பெண் பணியாளர் ஒருவர் அங்கு வந்து என்ன செய்கிறீர்கள் என கேட்க, அப்போது தான் அங்கு சிசிடிவி இருப்பதும், இவ்வளவு நேரம் தாங்கள் செய்த சம்பவத்தை ஒட்டு மொத்த கடைப்பணியாளர்களும் சிசிடிவி கேமராவில் பார்த்துக்கொண்டிருந்ததும் தெரிந்தது. தெரிந்தது தான் பாக்கி, அங்கிருந்து ஓட்டம் பிடிக்கத் துவங்கியது ‛லாக்கர்’ கும்பல். 


எங்கே விரட்டி வந்து விடுவார்களோ என்கிற அச்சத்தில் கடைசியாக கைமாறிய இதயம் நல்லெண்ணெய் பாக்கெட்டுகளை மட்டும் வீசி விட்டு தப்ப முயன்ற ஒரு பெண் மட்டும் வசமாக சிக்க, மற்ற இருவரும் எஸ்கேப். சிக்கிய பெண்ணை உசிலம்பட்டி நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர் சூப்பர் மார்க்கெட் பணியாளர்கள். அவரை விசாரித்த போது தான் போலீசாருக்கே அதிர்ச்சி கிடைத்தது. 




பிடிபட்ட மதுரை விக்கிரமங்கலம் வடகாட்டுபட்டியைச் சேர்ந்த 59 வயது ராக்கம்மாள் தான் அந்த கேங்கின் தலைவி. ஏற்கனவே குறிப்பிட்டது போல், அந்த கேங் பெயர் ‛பாவாடை லாக்கர்’ குரூப். இதயம் நல்லெண்ணெய் தான் இவர்களின் டார்க்கெட். ஒரு கடைக்குள் நுழைந்தால் குறைந்தது 15 இதயம் நல்லெண்ணெய் பாக்கெட்டுடன் வெளியே வருவது தான் இவர்களின் ஒரே குறி. நகர் பகுதி கடைகளில் நுழைந்தால் சிசிடிவி தொல்லை இருக்கும் என்பதால் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளை குறிவைத்து அபேஸ் செய்து வந்தது தெரியவந்தது. 


பரிதாபம் என்னவென்றால் அவர்கள் சென்ற கடையில் சிசிடிவி இல்லை என நினைத்து அவர்கள் உள்ளே நுழைந்ததுதான். பல ஆண்டுகளாக செய்து வரும் இந்த நூதன கொள்ளையில் சிக்கியது இதுதான் முதன்முறை. இத்தனை பிராண்டுகள் இருந்தும், அதென்ன இதயம் நல்லெண்ணெய் மீது அப்படி ஒரு பிரியம் என்று தானே கேட்கிறீர்கள்? 


அதற்கும் அவர்கள் பதில் வைத்திருந்தார்கள். திருடும் எண்ணெய் பாக்கெட்டுகளை தெரிந்த கடைகளில் விற்று, அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் வயிறு நிரப்பிக் கொண்டிருந்துள்ளது இந்த ‛லாக்கர்’ குரூப். நாள் ஒன்றுக்கு 1500 ரூபாய் வரை பணம் ஈட்டி, ஆளுக்கு 500 வீதம் பிரித்துக் கொள்வார்களாம். அதிக விளம்பரம் வருவதால் இதயம் நல்லெண்ணெய்க்கு கடையில் நல்ல மவுசு இருப்பதாகவும், எனவே தான் இதயம் நல்லெண்ணெய்யை மட்டும் குறிவைத்து திருடி விற்று வந்ததாக ஒப்புக்கொண்டார் ராக்கம்மாள். 




குரூப் தலைவியான இவர் தான் எங்கு செல்ல வேண்டும், எதை எடுக்கவேண்டும், எங்கு விற்கவேண்டும் என்பதை முடிவு செய்வாராம். உடன் வரும் இரு பெண்கள், ‛ஓகே பாஸ்...’ என்பதோடு, அவரது திட்டத்தை நிறைவேற்றுவார்களாம். தப்பித்த பெண்கள் குறித்த ‛க்ளூ’வை போலீசாரிடம் தந்துள்ள ராக்கம்மாள், வேறு யாரும் தங்கள் அணியில் இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். அதையும், இதையும் எடுக்காமல் இதயத்தை மட்டுமே எடுப்போம் என்கிற கொள்கை கூட்டம் கொத்தாக மாட்டியுள்ளதால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் சூப்பர் மார்க்கெட் வியாபாரிகள்.