நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள பள்ளமடை கிராமத்தைச் சேர்ந்தவர் சீவல் ராஜ்(29).  விவசாயியான  இவர் தமிழர் விடுதலைக் களம் என்ற அமைப்பில்  மானூர் பகுதி  ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் நேற்றிரவு வழக்கம் போல் வீட்டின் மொட்டை மாடிக்கு உறங்க சென்றுள்ளார்,  இரவு 11 மணியளவில் அவர் அயர்ந்து உறங்கி கொண்டிருந்த போது இரண்டு நபர்கள் மொட்டை மாடிக்கு சென்று அங்கு சீவல் ராஜின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருந்த மக்கள் சிலர் ஆயுதங்களுடன் இருவர்  வீட்டின் சுவர் ஏறி குதித்து தப்பி செல்வதை கண்டு  கூச்சலிட்டனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சீவல் ராஜ் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.




இது குறித்து மானூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,  தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சீவல் ராஜ் அதே ஊரில் பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படிக்கும் பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்தப் பெண்ணும் சீவல் ராஜை காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் பெண்ணின் சகோதரனான அஜித் என்பவருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அஜித் திருநெல்வேலியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவர் தனது தங்கையை கண்டித்துள்ளார். இருவரும் காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரத்துடன் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.




இதனிடையே அரசியல் ரீதியாகவும் சீவல் ராஜ்க்கு காளிமுத்து என்பவருடன் முன்விரோதம் இருந்துள்ளது. ஏற்கனவே அஜித் சீவல் ராஜ் மீது ஆத்திரத்துடன் அலைந்து திரிவதை தெரிந்துகொண்ட காளிமுத்து சிவல் ராஜை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது.  இந்த சூழலில் நேற்று இரவு 10 மணிக்கு வீட்டின் மொட்டை மாடியில் அவர் உறங்க சென்றதை அஜித்திற்கு தகவல் கொடுத்ததோடு அவருடன் சென்று கொலை செய்ய உதவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக பொறியியல் கல்லூரி மாணவர் அஜித் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கு  திட்டம் தீட்டி கொடுத்த காளி முத்துவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  சீவல் ராஜ், அஜித்  இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் சீவல்ராஜின் அரசியல் நடவடிக்கை அஜித்திற்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அது கொலை குற்றத்தில் முடிந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.