சென்னையில் தன்னுடைய மகளை கண்டித்ததால் ஆத்திரத்தில் தம்பியை அண்ணன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த ராசு என்பவர் மனைவி கனகா, மகள் மகாலட்சுமி மற்றும் தம்பி சந்திரன் என்ற விக்கி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இதில் 19 வயதான சந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்வது வந்துள்ளார். மேலும் சந்திரன் மீது நொளம்பூர் காவல் நிலையத்தில் 4 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது.
இதனிடையே நேற்று முன்தினமும் அவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது 5 வயதாகும் ராசுவின் மகள் மகாலட்சுமி செல்போனில் விளையாடி கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட சந்திரன் அச்சிறுமியை கண்டித்துள்ளார். மேலும் மகாலெட்சுமியிடம் இருந்து செல்போனை பறித்தது மட்டுமல்லாமல் அவரை அடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை அச்சிறுமி தனது தந்தை ராசுவிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராசு தனது மகளை எப்படி அடிக்கலாம் என தம்பி சந்திரனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இது ஒரு கட்டத்தில் தகராறாக மாறி இருவரும் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். இதில் மேலும் ஆத்திரமடைந்த அண்ணன் ராசு, தம்பி சந்திரனை கீழே தள்ளி அருகில் கிடந்த பெல்ட்டை எழுத்து கழுத்தை இறுக்கியுள்ளார்.
இதில் சந்திரன் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து ராசு அதிர்ச்சியில் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சந்திரன் மயங்கி கிடந்ததை கண்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர் பரிசோத்த நிலையில் சந்திரன் உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உதவி கமிஷனர் அகஸ்டின் பால்சுதாகர், நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்ட சந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நொளம்பூர் போலீசார் ராசுவை கைது செய்து சிறையிலடைத்தனர்.
சமீபகாலமாக ஆண்ட்ராய்டு போன்கள் அதிகமாக உபயோகிப்பதன் காரணமாக குடும்பங்களில் பிரச்சினை ஏற்பட்டு அது கொலையில் முடியும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்