கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார்(41). இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மேலும் ராஜகுமார் அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி இரவு மாலை வீட்டில் இருந்து கிளம்பி வெளியே சென்றுள்ளார். பின் நீண்ட நேரமாகியும் இரவு வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் வீட்டிற்கு வராத நிலையில் தக்கலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 8 ஆம் தேதி காலை முருங்கைவிளை பகுதியில் உள்ள ஒரு குளத்தில் ஆண் உடல் மிதப்பதை அங்கு குளிக்க சென்ற மக்கள் பார்த்து உள்ளனர், பின் இது குறித்து தக்கலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குளத்தில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டனர்.
அப்போது விசாரணையில் நேற்று மாலை காணாமல் போன ராஜகுமார் உடல் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜகுமார் உடலில் காயம் இருந்துள்ளது. அதோடு குளத்தின் கரையில் ரத்த கறையும் படிந்து இருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்த நிலையில் அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காவல்துறையினரின் விசாரணையில் அன்று இரவு குளத்திற்கு அருகே 3 பேர் மது குடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு சென்ற ராஜகுமாருக்கும் அவர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் மூவரும் சேர்ந்து ராஜகுமாரை கொலை செய்து குளத்தில் வீசியது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஏற்கனவே ராஜகுமாருக்கும் அவர்களுக்கும் இருந்த முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதன் பேரில் அதே பகுதியை சார்ந்த ஜான் பீட்டர் , ஜெபமணி, கிறிஸ்டோபர் மோசஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்விரோதம் காரணமாக 3 பேர் சேர்ந்து மீன் வியாபாரியை கொலை செய்து உடலை குளத்தில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.