திண்டுக்கல்: தாயின் இரண்டாவது கணவரை கொன்று தண்டவாளத்தில் வீசிய மகன் கைது
’’தாயின் இரண்டாவது கணவர் ஜெரால்ட் தங்கராஜ் எந்த வேலைக்கும் செல்லாமல் கிஷோரின் சம்பள பணத்தை அடித்து வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்’’
திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் கடந்த 18ஆம் தேதி 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து கலிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். அதற்கு பின்னர் இரண்டு நாட்களாக காவல் துணை கண்காணிப்பாளர் இலக்கியா தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையில் இறந்தவர் ஏ.வெள்ளோடு கோம்பை பாத்திமா நகரைச் சேர்ந்த ஜெரால்ட் தங்கராஜ் என்பது தெரியவந்தது. அவரது மனைவிக்கு 2 கணவர்கள். மூத்த கணவருக்கு பிறந்தவர் கிஷோர். கிஷோர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். ஜெரால்ட் தங்கராஜ் எந்த வேலைக்கும் செல்லாமல் கிஷோர் சம்பள பணத்தை அடித்து வாங்குவது என வழக்கமாக வைத்துள்ளார். வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு ஊதாரித்தனம் செய்துள்ளார். இதில் கிஷோர் மூத்த கணவர் மகன் என தனிமைப்படுத்தப்பட்டதிலும், அடித்து கொடுமை செய்து பணம் பறித்து வந்ததாலும் கிஷோர் மனம் உடைந்து தனது வளர்ப்புத் தந்தை மீது வெறுப்பு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பின்பு அவரை கொலை செய்வது என திட்டமிட்டு கடந்த 18ஆம் தேதி செட்டியபட்டியில் இருந்து பூத்தாம்பட்டி செல்லும் வழியில் ஜெரால்டு தங்கராஜை கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேருடன் உருட்டு கட்டையால் அடித்து அவரை அருகில் உள்ள தண்டவாளத்தில் போட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர். தண்டவாளத்தில் இறந்தவர் மீது ரயில் ஏறியதில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்துள்ளார். கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனம் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய உடைந்த பீர் பாட்டில், உருட்டுக்கட்டை மற்றும் கற்கள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில் கிஷோர் (21) மற்றும் அவரது நண்பர்கள் ஆறுமுக பாண்டி (21), அபிஸ் (19) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மோப்பநாய் மற்றும் அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து கொலையை ரயிலில் அடிபட்டதாக திசை திருப்ப நினைத்த கொலையாளிகள் மூன்று பேரையும் கைது செய்த தனிப்படையைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் குழுவினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதி கொடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு குற்ற சம்பவங்களில் கைதான 24 நபர்களை போலிசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பித்திலிருந்து 2 கொலைகள் 1 கொலை முயற்சி நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
’கொலை மாவட்டமாக மாறும் திண்டுக்கல்’ - தொடர் குற்றங்களுக்கு பூட்டுப்போடுமா? போலீஸ்..!