தஞ்சாவூர்: தேவதையை கண்டேன் படத்தில் காதலி மீது தனுஷ் போலீசில் புகார் செய்வாரே அதேபோல் ஒரு சம்பவம். ஆனால் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் ஏற்றி பணம் கேட்டு மிரட்டியதாக பெண் மீது பட்டதாரி வாலிபர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். இது எங்கு தெரியுங்களா?
காதலிப்பது போல் நடித்து புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டு பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உட்பட அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளைஞர் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகே மல்லிப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜவாஹிர் என்பவரின் மகன் முகமது ஷாம் (31). பட்டபடிப்புக்காக சென்னைக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்றார். அப்போது அமைந்தான்கரை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்த அபுதாஹிர் என்பவரின் மகள் ரிஸ்வானா (21) என்பவர் முகமது ஷாமுக்கு அறிமுகம் ஆகி உள்ளார்.
ஆரம்பத்தில் நட்பாக பழகிய இருவரும் பின்னர் காதலர்களாக மாறினர். காதலித்தபோது இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ரிஸ்வானாவின் நடவடிக்கைகள் சரியில்லாததால் முகமது ஷாம் காதலைத் துண்டித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரிஸ்வானா தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். மேலும் அந்தப் புகைப்படங்களை முகமது ஷாம் பெற்றோருக்கும் அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது ஷாம் இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் போன்ற பிரிவுகளில் ரிஸ்வானா, அவரது தந்தை அபுதாஹிர், தாய் அபிதா மற்றும் உறவினர் இப்ராஹிம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கு சென்னை போலீசாருக்கு மாற்றப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
முதலில் நன்றாக பழகிய அந்த இளம் பெண்ணின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த முகமது ஷாம் மெதுவாக அந்த பெண்ணின் பழக்கத்தை துண்டிக்க பார்த்துள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த பெண் புகைப்படங்களை வைத்து மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பிறகே இது குறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் முகமது ஷாம் புகார் செய்துள்ளார். இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது விசாரணையின் முடிவில்தான் தெரிய வரும்.
இருப்பினும் காதலித்து புகைப்படங்களை வைத்து மிரட்டுகிறார் என்று வாலிபர் ஒருவர் பெண் மீது போலீசில் புகார் செய்துள்ளது தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் படத்தில் வருவது போல் இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.