தஞ்சாவூர்: தஞ்சை அருகே போலீசார் மேற்கொண்ட அதிரடி வாகனச் சோதனையில் 1000 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சொகுசு கார் மற்றும் பைக் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.


தஞ்சை அருகே வல்லம் உட்பட பகுதிகளில் தமிழக அரசு தடை செய்த புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் வல்லம் டிஎஸ்பி நித்யா மேற்பார்வையில், வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சிசாரா மற்றும் போலீசார் திருமலைசமுத்திரம் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


தொடர்ந்து காரில் வந்த தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை ரத்தினசாமி நகரை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் கெளதம் (30), தஞ்சை கீழவாசலை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் வீரமணி (40) ஆகியோரை கைது செய்து வல்லம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.




இதில் கௌதம் கொடுத்த தகவலின் பேரில் ரத்தினசாமி நகரில் குடோன் இருப்பதும் அதில் புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடோனில் சோதனை நடத்தினர். இதில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


மேலும் குடோனில் இருந்த தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மகன் தினேஷ் (30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். காரில் கொண்டு வரப்பட்டது மற்றும் குடோனில் இருந்தது என மொத்தம் 1000 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் புகையிலை பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் மற்றும் ஒரு பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்பு துறை ஆணையர் பிறப்பித்தார்.


குட்கா தடை விதிக்க தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிடலாம்- ஹைகோர்ட் உத்தரவுக்கு தடை: உச்சநீதிமன்றம்குட்கா தடை விதிக்க தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிடலாம்- ஹைகோர்ட் உத்தரவுக்கு தடை: உச்சநீதிமன்றம்


இதையடுத்து தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விழுந்தது. இதனை மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை, அபராதம் எடுக்கப்பட்டது. இதையடுத்து தடைக்கு எதிராகவும், தடையை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் ஆணையை ரத்து செய்த சென்னை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.