தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ளது வடக்கு அழகு நாச்சியார்புரம். இப்பகுதியை சேர்ந்தவர் மகாகிருஷ்ணன் (40). வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவராது மனைவி கனகாதேவி(32). இவர்களுக்கு முத்துலெட்சுமி(14), கவின்(7) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மகாகிருஷ்ணனுக்கு அப்பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கனகாதேவிக்கு தெரியவர கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கணவன், மனைவி இருவரும் ஒரே வீட்டில் கடந்த 2 வருடத்திற்கும் மேல் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மகாகிருஷ்ணனின் திருமணத்தை மீறிய உறவு தொடர்பாக காவல்துறைக்கு புகார் செல்லவே காவல்துறையினர் அவரை அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மகாகிருஷ்ணன் வீட்டுக்குச்சென்று மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் உள்ள பூந்தோட்டம் ஒன்றில் பெண் ஒருவர் நிர்வாணமான நிலையில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மேலும் அவரது முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து குருவிகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கனகாதேவி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இக்கொலையை செய்தது அவரது கணவர் மகாகிருஷ்ணன் தான் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக கணவன் - மனைவிக்கிடையே நடந்த தகராறில் மகாகிருஷ்ணனின் தவறான உறவை கனகாதேவி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மகாகிருஷ்ணன் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கனகாதேவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கனகாதேவியின் இரண்டு குழந்தைகளும் தாயின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரையும் கலங்கச்செய்தது. இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகாகிருஷ்ணனை தீவிரமாக தேடி வந்த நிலையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமணத்தை மீறிய உறவு கண்ணை மறைத்த நிலையில் கட்டிய மனைவியையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அக்கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்