ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர் வேகமாக ஓட்டி வந்த கார், பைக் மீது மோதியதில் 14 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

லால் கோதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கனேரி கேட் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜகத்புரா பகுதியைச் சேர்ந்த சமஸ்கிருதி என்ற 27 வயது பெண் ஒருவர் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சமஸ்கிருதி குடிபோதையில் தனது காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது பைக்கில் ஒரு தந்தை தனது இரண்டு மகள்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.

சமஸ்கிருதி ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஆசாத் நகரில் வசிக்கும் இஸ்லாமுதீன் ஓட்டிவந்த பைக்கில் வேகமாக மோதியது. இதில் பைக் தூக்கி வீசப்பட்டது.

பைக்கில் வந்த 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். பின்னால் அமர்ந்திருந்த அசிமா தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

கார் விபத்துக்கு பின்பு சற்று தூரம் சென்று நின்றது. காரில் பயணம் செய்த 2 ஆண்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் மற்றொரு பெண் பயணி காரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் படுகாயமடைந்த இரண்டு பேரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை ஓட்டி வந்த சமஸ்கிருதியை போலிசார் கைது செய்துள்ளனர். பின் இருக்கையில் இருந்த மற்றொரு பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளூர் காவல் நிலையத்திற்கு வெளியே ஒரு கூட்டம் கூடியதால், இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தைத் தூண்டியது. நீதி கோரிய போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் எம்எல்ஏ ரபீக் கான் சம்பவ இடத்திற்கு வந்தார்.

சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளியில், குற்றம் சாட்டப்பட்ட பெண் காவல்துறையினரிடம் கைகளைக் கூப்பி மன்னிப்பு கேட்பது போல் தெரிகிறது. மேலும் அவர் குடிபோதையில் இருப்பது போல் தெரிகிறது. பின்னர், அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில், அவரை காரில் இருந்து வெளியே இழுத்து போலீசார் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் கூறுகையில், "இறந்த பெண் தனது தந்தை இஸ்லாமுதீன் மற்றும் அவரது 6 வயது சகோதரியுடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு சுமார் 12.20 மணியளவில் சங்கனேரி கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது, ​​வேகமாக வந்த கார் ஒன்று அவர்களின் பைக்கை பின்னால் இருந்து மோதியது. மோதல் மிகவும் வலுவாக இருந்ததால், பைக் உட்பட மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.