சென்னயிஜ் பிரபல தனியார் பள்ளியின் பாலியல் ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்ந்து கராத்தே பயிற்சி மாஸ்டர் கெபிராஜ் மற்றும் பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் பெறப்பட்டுள்ளன. பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்கலாம் என்று அவரது செல்போன் நம்பர் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப் வாயிலாக 100 புகார்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ளன.
இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர் நூற்றாண்டுகள் பழமையான ஒரு பள்ளியில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரை 6 ம் வகுப்பில் இருந்து 12 ம் வகுப்பு வரை படித்துள்ளார். விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவரும் அண்ணாதுரையிடம் பயிற்சி பெற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளதாகவும், பயிற்சி அளித்த ஆசிரியர் அண்ணாத்துரை இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், உடல் ரீதியாக சீண்டல்களில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
2018-ஆம் ஆண்டு அந்த மாணவியை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளதாகவும், தற்போது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாலியல் தொந்தரவு குறித்து வெளியில் சொல்ல முடியாமல் இருந்த மாணவி சமீபத்தில் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார் அளித்து வருவதும் அதனை அடுத்து ஆசிரியர்கள் கைது செய்யப்படுவதையும் அறிந்து தைரியம் அடைந்து தற்போது காவல்நிலயத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பையும், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாணவி அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்து கடந்த மூன்று தினங்களாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து, அந்த ஆசிரியர் தங்களுக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி மேலும் 2 மாணவிகள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 2010-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை படித்த மற்றொரு மாணவியும், 2008-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரை படித்த மற்றொரு மாணவியும் இந்த திடுக்கிடும் புகாரை அளித்தனர். இதையடுத்து, மேலும் இரண்டு மாணவிகளின் சாட்சிகளை கொண்டு அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சூழலில் அந்த பள்ளியில் படித்த பல மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ந்து போய் உள்ளனர். மேலும் இந்த பாலியல் குற்றச்சாட்டு இந்த மூன்று மாணவியுடன் முடியுமா? அல்லது இன்னும் பல மாணவிகளுக்கு புகார் கொடுக்க வருவார்களா என அச்சத்தில் உறைந்துள்ளனர்.