நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்தவுடன் கடையை அடைத்து விட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். டாஸ்மாக் கடையின் காவலாளியான அதே பகுதியை சேர்ந்த தேவராஜ்(வயது 60) என்பவர் பாதுகாப்பு  பணியில் இருந்தார். இந்நிலையில் நள்ளிரவு  3 பேர் கொண்ட கும்பல் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். அக்கும்பல் காவலாளி தேவராஜை மிரட்டி,  அவரது வாயில் மதுவை ஊற்றியுள்ளனர். அதன் பின்னர் அக்கும்பல் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை இரும்பு கம்பியால் உடைத்து,  ஷட்டரை திறந்து உள்ளே புகுந்துள்ளனர்.  கடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களை சாக்கு பையில் கட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக தகலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என  கூறப்படுகிறது.


ஏற்கனவே இதே  கடையில் கடந்த 15ம் தேதி அதே போன்று இதே கடையில் காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி மதுபானங்களை மர்மக்கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. தற்போது மீண்டும் இந்த துணிகர கொள்ளை சம்பவம் 2வது முறையாக நடந்துள்ளது. இதேபோன்று வடக்கன் குளத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 7ம் தேதி பூட்டை உடைத்து  கொள்ளை போன சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தெற்கு வள்ளியூர் டாஸ்மாக் கடையில் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக பணகுடி போலீசார், தொடர்ந்து 2வது முறையாக வழக்குப்பதிவு செய்து,  கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இம்மூன்று சம்பவங்களிலும் இதுவரை கொள்ளையர்கள்  கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 3 முறை கொள்ளையடித்துச் செல்லப்பட்ட மதுபானங்களின் மதிப்பு சுமார் 10 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது.


தொடர்ந்து  டாஸ்மாக்கில் மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வள்ளியூர் வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடைகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் முகமூடி அணிந்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண