தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்தவர் மணிகண்டன். கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட அவருக்கு கட்சித் தலைமையிடம் வாய்ப்பு அளிக்கவில்லை. நாடோடிகள் உள்பட சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாந்தினி. இவர் தற்போது தென்னிந்தியாவிற்கான மலேசியா தூதரக அதிகாரியாக உள்ளார்.


இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பழகியதாகவும், இதனால் தான் மூன்று முறை கருத்தரித்து பின்னர் கலைத்ததாகவும், ஆனால் மணிகண்டன் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாகவும் சென்னையில் உள்ள அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.


அவரது புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கடந்த மாதம் 21-ந் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் மீது நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனும், நடிகை சாந்தினியும் தெரிந்தே பழகிய காரணத்தால் பாலியல் குற்றச்சாட்டில் இருந்து வேறு பிரிவுக்கு இந்த வழக்கை மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும். அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.




இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இரு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கோரியிருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் மணிகண்டனை இரு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனை போலீசார் இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றனர்.


தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவல்துறையினர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர், அங்கிருந்து அவரை விசாரணைக்கு மதுரை அழைத்துச் செல்ல உள்ளனர்.


முன்னதாக, நடிகை சாந்தினி அளித்த குற்றச்சாட்டில் தன்னை கைது செய்யாமல் இருக்க மணிகண்டன் முன்ஜாமீன் கோரியிருந்தார். ஆனால், அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது. பின்னர். தலைமறைவான மணிகண்டனை பிடிக்க இரண்டு தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு அவரை கைது செய்தனர்.




இதையடுத்து, அவரை நீதிமன்றம்  முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை சைதாப்பேட்டையில் உள்ள சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சிறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மணிகண்டனுக்கு பல்வேறு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர் சைதாப்பேட்டை சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த மணிகண்டனை, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.