தொலைக்காட்சி நடிகை, டிக் டாக் பிரபல, பிக்பாஸ் வெளிச்சம் என பரபரப்பாக இயங்கியவர் சோனாலி போகத். அதுமட்டுமல்ல அவர் பாஜக பிரமுகரும் கூட. ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.


இந்நிலையில் தான் 41 வயதான சோனாலி போகத் தன்னுடைய உதவியாளர்களுடன் கோவாவில் தங்கி இருந்தபோது அவருக்கு நெஞ்சில் வலி ஏற்பட்டுள்ளது. 


இது தொடர்பாக தன்னுடைய உதவியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். உடனடியாக சோனாலி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 


உறவினர்கள் புகார்: சோனாலி போகத்தின் சகோதரர் ரிங்கு டாக்கா கோவா காவல்துறையில் புகார் அளித்துள்ளார், அவரது சகோதரியை அவரது தனிப்பட்ட உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் ஆகியோர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொலை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.




சோனாலியின் சகோதரி, ''என்னுடைய சகோதரிக்கு நிச்சயம் மாரடைப்பு ஏற்பட்டிருக்காது. அவள் மிகவும் கட்டுக்கோப்பாகவே இருந்தாள். இந்த மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். அவள் மாரடைப்பில் இறந்தாள் என்பதை என் குடும்பம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவளுக்கு உடல்நலப்பிரச்சினைகள்கூட எதுவுமே இல்லை. அவள் இறப்பதற்கும் முன்பு எனக்கு போன் செய்தார். ஏதோ தவறாக நடப்பதாகவும் வாட்ஸ் அப்பில் பேசுவதாகவும் கூறி அழைப்பை துண்டித்தார். அதன்பின்னர் அவர் அழைக்கவே இல்லை. நான் அழைத்தபோதும் அவர் எடுக்கவில்லை. என் அம்மாவிடம் பேசிய சோனாலி, ஏதோ உடம்புக்கு முடியவில்லை. சாப்பிட்ட பிறகு ஒரு மாதிரி சோர்வாக உள்ளதாக கூறியுள்ளார். தனக்கு எதிராக சதி நடப்பதுபோலவும், ஏதோ தவறாக நடப்பதாகவும் அவர் உணர்ந்துள்ளார். அதைத்தான் என் அம்மாவிடம் தெரிவித்தார்’’ என்று கூறியுள்ளார்.






சோனாலி அருந்திய பானத்தில் ஏதோ சேர்க்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. இந்நிலையில், சோனாலி போகத் கோவா ஹோட்டலில் இருந்து நடக்க முடியாமல் நடக்க அவரை ஒருவர் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.


இதனால் சோனாலி மரணம் இயற்கையானது அல்ல அதில் ஏதோ மர்ம இருக்கிறது என்ற பேச்சுகள் இன்னும் வலுப்பெற்றுள்ளன.


சோனாலி போகத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவர்களது உறவினர்கள் கூறிவரும் நிலையில் போலீஸ் விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.