ஒரு மெழுகுவர்த்தி கேட்டதற்காக தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த வெங்கத்தூர் கன்னியம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (51).
கூலித்தொழிலாளியான இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் பாண்டியன் என்ற மகனும் உள்ளனர். பாண்டியன் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இதனால் 28 வயதாகியும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
பாண்டியனின் மனநல பாதிப்பை குணம் செய்ய அவரது பெற்றோர்கள் ஏறி இறங்காத மருத்துவமனையும் இல்லை. பிரார்த்தனை செய்யாத கோயிலும் இல்லை.
ஆனால் பாண்டியனுக்கு குணமாகவில்லை. கடந்த சில மாதங்களாகவே பாண்டியன் அதிகமாக மூர்க்கத்தனத்துடன் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு பாண்டியன் தனது தாய் மகேஸ்வரியை தாக்கி உள்ளார். இதனால் திருநின்றவூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மகேஸ்வரி சென்றுவிட்டார்.
இதற்கிடையில், பாலகிருஷ்ணன் தனது மகனை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் பாலகிருஷ்ணன் அவரது மகன் பாண்டியன் ஆகியோர் இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. அப்போது பாண்டியன் தனது தந்தை பாலகிருஷ்ணன் இடம் மெழுகுவர்த்தியை கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
பாலகிருஷ்ணன் மெழுகுவர்த்தியை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது பாலகிருஷ்ணன், பாண்டியனைத் திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாண்டியன் வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தை பாலகிருஷ்ணனை தலையிலேயே தாக்கியுள்ளர். இதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து மணவாளநகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், மணவாள நகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து மணவாளநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே தந்தையை மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனநல பாதிப்பு குணப்படுத்தக் கூடியதே. நம் நாட்டில் உடல் நலப் பிரச்சினையென்றால் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடும் நாம் யாரும் எனக்கு ஸ்ட்ரெஸ், டிப்ரெஸன் என மனநோய் இருக்கிறது என்பதை வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. சரியான சிகிச்சையும் எடுப்பதில்லை. ஆரம்ப நிலை மனநல பாதிப்புகளை கவனித்து சரி செய்யாமல் விடும்போது அது அடுத்தடுத்த மோசமான மனநிலை பாதிப்புகளில் கொண்டு போய்விட்டுவிடும். அதனால், மனநலனை போற்றிப் பாதுகாக்க வேண்டும்.