சேலம் அருகே சொத்தை அபகரிக்கும் பொருட்டு தாய் மற்றும் மகனை கடத்தி துன்புறுத்திய வழக்கில் 5 பேருக்கு 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள மேல் அழகாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மேட்டூர் நீதிமன்ற முன்னாள் ஊழியரான கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் தனது நிலப்பத்திரத்தை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார். வட்டியுடன் சேர்த்து கடனாக பெற்ற ரூபாய் 1.50 லட்சம் ரூபாயை கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பி செலுத்தப்பட்ட நிலையில் நிலத்தின் பத்திரத்தை திருப்பி கொடுக்காமல் அபகரிக்கும் நோக்கில் நிலத்தின் உரிமையாளர் அசோக் குமார் மற்றும் அவரது தாயார் ஆகியோரை கிருஷ்ணமூர்த்தி கடத்தி அடித்து துன்புறுத்தியதாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 



ஆள் கடத்தல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் கலைவாணன், சக்திவேல், ராஜா, சுபேஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சேலம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு விசாரணையையும் கேட்ட நீதிபதி ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 1,000 அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, வழக்கில் தண்டனை பெற்ற சக்திவேல் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், கிருஷ்ணமூர்த்தி, கலை வாணன், ராஜா மற்றும் சுபேஸ் ஆகிய நான்கு பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 



ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் 5 பேரும் தண்டிக்கப்பட்ட தால் பாதிக்கப்பட்ட அசோக் குமார் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.