சிவசங்கர் பாபா வற்புறுத்தியதால் தான் நாங்கள் மாணவிகளிடம் பேசி ரகசிய அறைக்கு அழைத்து வந்தோம் என 3 ஆசிரியைகள் சிபிசிஐடி அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் அளித்த புகாரின் படி 3 வது போக்சோ வழக்கிலும் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.




 சென்னை அடுத்த கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் சிபிசிஐடி போலீசார் டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அவரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.




சென்னை சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. அதைதொடர்ந்து சிவசங்கர்பாபா புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதுவரை சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட 18 முன்னாள் மாணவிகள் சிபிசிஐடி போலீசாரிடம் பாலியல் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, சிபிசிஐடி போலீசார் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிய மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சுசில் ஹரி பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவரின் தங்கையையும் ஆசீர்வாதம் செய்வதாக கூறி சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மாணவி அளித்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து கடந்த 11ம் தேதி சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலிசார் 2 வது போக்சோ வழக்கிலும் கைது செய்தனர். 




சிவசங்கர் பாபாவுக்கு மாணவிகளை அழைத்து வந்து விட்டதாக மாணவிகள் அளித்த புகாரின் படி சுசில் ஹரி பள்ளியில் வேலை செய்து வரும் 5 ஆசிரியைகள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து 5 ஆசிரியைகளும் சிபிசிஐடி போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில் 5 ஆசிரியைகளுக்கும் சிபிசிஐடி போலீசார் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை தொடர்ந்து நேற்று 3 ஆசிரியைகள் சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு கொடுத்ததற்கு 3 ஆசிரியைகளும் வலுவான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் சிவங்கர் பாபாவை 3 வது வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.




ஆசிரியர்களும் நடத்திய விசாரணையில், சுசில் ஹரி பள்ளியில் 10 ஆண்டுகளாக 3 ஆசிரியைகளும் வேலை செய்து வருகின்றனர். சிவசங்கர் பாபா சொல்படி அவர்கள் நடந்து கொண்டுள்ளனர். நம்பிக்கைக்குரிய 5 ஆசிரியைகளும் வாரத்தில் தலா 2 மாணவிகளிடம் பேசி சிவசங்கர் பாபா ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி அழைத்து வர வேண்டும். அதுதான் அவர்களின் பணி எனக் கூறப்படுகிறது அதன்படி தான் ஆசிரியைகள் பள்ளி மாணவிகளிடம் பாபாவின் ஆசீர்வாதம் கிடைத்தால் பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி மாணவிகளை சிவசங்கர் பாபாவின் ரகசிய அறைக்கு அழைத்து வந்து விட்டுள்ளனர். அந்த வகையில் 3 ஆசிரியைகளும் 50 க்கும் மேற்பட்ட மாணவிகளை அழைத்து வந்து சிவசங்கர் பாபா ஆசைக்கு இணங்க வைத்துள்ளனர், இவ்வாறு தற்போது தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.