ப்ரியமானவர்கள் உயிரிழக்கும் போது, அவர்கள் என்றாவது வரமாட்டார்களா என்று எங்குவோர் பலர் உண்டு . இறந்து , இறுதிச்சடங்கு செய்து, அடக்கம் செய்தவர், மீண்டும் வீட்டுக்கதவை தட்டி உயிரோடு வந்தால் எப்படி இருக்கும்? ஈரோடில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது.
ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூரை அடுத்த புஞ்சைதுறையம் பாளையத்தைச் சேர்ந்தவர் 55 வயதான மூர்த்தி. கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான அவர், அப்பணிக்காக தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கும் செல்வது வழக்கம். வழக்கம் போல, சில மாதங்களுக்கு முன் கரும்பு வெட்டும் பணிக்காக வெளியூர் சென்ற மூர்த்தி, அதன் பின் வீடு திரும்பவில்லை. மாதங்கள் ஆன நிலையில் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் , தகவலும் வரவில்லை. அவரது மகன்களான கார்த்தி மற்றும் பிரபு குமார் ஆகியோர், தந்தையோடு தொடர்புடைய பலரை நாடி சென்றும், அவர் பற்றி தகவல் கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தனர். இந்நிலையில், கடந்த மார்ச் 31 அன்று வாட்ஸ்ஆப்பில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக அந்த தகவலில் போட்டோ உடன் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மாயமான மூர்த்தியின் மகன்களின் வாட்ஸ்ஆப்பிற்கும் அந்த பதிவு பகிரப்பட்டது. உடனே சம்பட இடத்திற்கு சென்று மகன்கள் இருவரும் சடலத்தை பார்த்தனர். முகம் அழுகிய நிலலையில் சடலம் சிதைந்து போயிருந்தது. ஆனால், உருவ ஒற்றுமை அனைத்தும் தனது தந்தை போல இருந்ததால், இறந்தது தனது தந்தை தான் என கார்த்தி மற்றும் பிரபு குமார் முடிவு செய்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சட்ட விதிகமுறைகளுக்குப் பின் அந்த சடலத்தை பெற்றுக் கொண்டனர்.
பின்னர் தனது தந்தையின் உடலை புஞ்சமை துறையம்பாளையத்திற்கு கொண்டு வந்த மகன்கள், உறவினர்கள் குடும்பத்தார் முன்னிலையில் தங்களது முறைப்படி சடங்குகளை செய்து, அடக்கம் செய்தனர். இறந்த தந்தையின் போட்டோவுக்கு மாலை அணிவித்து வீட்டில் விளக்கும் ஏற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு, அவர்களின் வீட்டு கதவை யாரோ தட்டியுள்ளனர். கதவை திறந்து பார்த்தால், மூர்த்தி உயிரோடு நிற்கிறார். குடும்பத்தாருக்கு ஒரே அதிர்ச்சி. என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு புறம் அவர்களுக்கு பேயாக இருக்குமோ என்கிற பயம் இருந்துள்ளது.
பிறகு, தான் பணிக்குச் சென்ற இடத்தில் தங்க நேர்த்ததையும், பணம் இல்லாமல் வரத் தாமதமானதையும் விளக்கியுள்ளார் மூர்த்தி. இதைத் தொடர்ந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூர்த்தி வீட்டிற்கு வந்த பங்களாப்புதூர் போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை என நினைத்து புதைக்கப்பட்ட அந்த சடலம் யாருடையது என்கிற தகவலையும் போலீசார் தேடி வருகின்றனர். இறந்ததாக, இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, புதைக்கப்பட்டதாக கருதப்பட்டவர், திடீரென உயிரோடு வந்த சம்பவம், ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.