செங்கல்பட்டு, கேளம்பாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள சர்வதேச தனியார் உண்டு உறைவிட பள்ளி. இந்த பள்ளியின் நிர்வாகியாக செயல்பட்ட சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு அளித்தனர். இதையடுத்து, சிவசங்கர் பாபாவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியது.
ஆனால், அவர் ஆஜராகாத நிலையில் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பின்னர், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் டெல்லியில் கைது செய்தனர். பின்னர். சென்னை கொண்டு வரப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில், போலீசாரால் சிவசங்கர் பாபாவிற்கு உதவியாக மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக அந்த பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியையகள் சுஷ்மிதா மற்றும் தீபா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆசிரியை சுஷ்மிதா போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரியை தீபா தலைமறைவாகினார்.
இந்த நிலையில், தலைமறைவாகியுள்ள தீபா வெங்கட்ராமன் தற்போது முன்ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
“ முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். சிவசங்கர் பாா மீது போக்சோ சட்டத்தில் பதிவான வழக்கில் தேவையில்லாமல் என்னையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேர்த்துள்ளனர்.
என் மீதான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. கற்பித்தலில் உள்ள ஈடுபாட்டால், தனியார் வங்கி அதிகாரி வேலையை கைவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தேன். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்பதால், முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்.”
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. முன்னதாக, பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா தலைமறைவானதால் அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்ததும், பின்னர் அவர் மொட்டை அடித்துக்கொண்டு திரிந்த நிலையில், டெல்லியில் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சிவசங்கர் பாபாவின் பாலியல் சீண்டல்களுக்கு ஒத்துழைப்பதற்காக மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியை சுஷ்மிதா அந்த பள்ளியின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.