பச்சை பொய்..! லாம்போர்கினி கார், பணக்கார திமிர், காவல்துறையின் மட்டமான வேலை - கொதிக்கும் நெட்டிசன்கள்
Kanpur Lamborghini: கான்பூர் லாம்போர்கினி விபத்து தொடர்பான வீடியோ ஆதாரங்கள் இருந்து, புகையிலை நிறுவன உரிமையாளரின் மகனுக்கு பதிலாக ஓட்டுனர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Kanpur Lamborghini: கான்பூர் விபத்தின் போது லாம்போர்கினி காரை பிரபல புகையிலை நிறுவன உரிமையாளர் ஓட்டவே இல்லை எனவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
விபத்து ஏற்படுத்திய சொகுசு கார்:
கான்பூரில் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாம்போர்கினி கார் ஒன்று, நடைபாதையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்தனர். மேலும் பல வாகனங்களும் மோட்டி மோதி நசுக்கப்பட்டன. இதுதொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில், காரின் ஓட்டுனர் இருக்கையில் இருந்து பவுன்சர்களால் மீட்கப்பட்ட இளைஞர் சிவம் மிஸ்ரா எனவும், அவர் பிரபல புகையிலை நிறுவன உரிமையாளரின் மகன் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், விபத்தின் போது அந்த நபர் காரை ஓட்டவே இல்லை என காவல்துறை தற்போது வழக்குப்பதிவு செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் இருப்பது என்ன?
இணையத்தில் வைரலாகியுள்ள வீடியோவில், “விபத்து ஏற்படுத்திவிட்டு சாலையோரமாக நின்றிருந்த காரின் கதவை திறந்த பவுன்சர்கள், தடுமாற்றமான நிலையில் இருந்த (மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது) சிவம் மிஸ்ராவை வெளியே கொண்டு வந்து, நடக்க முடியாததால் அவரை தூக்கிச் சென்றுள்ளனர். அப்போது சுற்றியிருந்த பொதுமக்கள் இதனை வீடியோவாக பதிவு செய்யுங்கள், வீடியோவாக பதிவு செய்யுங்கள்” என பேசியதும் பதிவாகியுள்ளது.
Kanpur Lamborghini crash: video shows bouncers pulling out tobacco baron’s son from car. pic.twitter.com/MLWpF2S6xQ
— The Tatva (@thetatvaindia) February 9, 2026
ஆதாரங்கள் இருந்தும் பச்சை பொய்
10 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது சிவம் மிஸ்ரா தான் என்பதை நிரூபிக்க வீடியோ ஆதரங்களே உள்ளன. ஆனாலும், அந்த காரை அவர் ஓட்டவே இல்லை என வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ”விபத்து நேர்ந்தபோது அந்த காரை மோகன் எனும் ஓட்டுனர் தான் இயக்கினார். எனவே சிவம் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்ய முடியாது” என அவரது வழக்கறிஞர் பேசியுள்ளார்.
போலீசாரின் மட்டமான செயல்
விபத்து ஏற்படுத்தியவரின் தந்தை செல்வாக்கு மிக்க நபர் என்பதால், ஆரம்பத்தில் காவல்துறை அவருக்கு சாதகமாகவே நடந்துள்ளது. சிவம் மிஸ்ராவின் பெயரை கூட முதல் தகவல் அறிக்கையில் சேர்க்காமல் இருந்துள்ளது. அதில், அடையாளம் தெரியாத நபர் விபத்தை ஏற்படுத்தியதாகவே குறிப்பிடட்டு இருந்தது. இதனிடையே, விபத்து தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து, ”சினிமாக்கள் பொய் இல்லை போல, அனைத்து ஆதாரங்களும் இருந்தும் குற்றவாளியை காப்பாற்ற காவல்துறை தீவிரம் காட்டுகிறது, இன்னும் எத்தனை காலத்திற்கு அப்பாவி ஓட்டுனர்கள் பலிகடா ஆக்கப்படுவார்கள்” என நெட்டிசன்கள் கொதித்து எழுந்தனர். இந்த வீடியோக்கள் வைரலாகவே சிவம் மிஸ்ராவின் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கவனக்குறைவாக செயல்பட்டதாக இந்த வழக்கை விசாரித்து வந்த சந்தோஷ் குமார் எனும் காவல் ஆய்வாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
யார் இந்த சிவம் மிஸ்ரா, விபத்து நடந்தது எப்படி?
கான்பூரின் குவால்டோலி பகுதியில் உள்ள விஐபி சாலையில் கடந்த 8ம் தேதி பிற்பகல் சுமார் 3:15 மணியளவில், கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய சொகுசு காரானது முதலில் ஒரு ஆட்டோ ரிக்ஷா மீது மோதியது. தொடர்ந்து, ஒரு மோட்டர் சைக்கிள் மீது மோத அதில் இருந்த ஓட்டினர் 10 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். அந்த பைக் காரின் அடியில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் சென்ற பிறகு, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி கார் நின்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய சிவம் மிஸ்ரா , பன்ஷிதர் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரான கே.கே. மிஸ்ராவின் மகன் ஆவார். தந்தையின் நிறுவனத்தில் இவர் ஐ.டி. துறையை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
























