கேரளாவில் கடந்த 2022ம் ஆண்டு ஷரோன்ராஜ் என்ற இளைஞரை, கன்னியாகுமரியைச் சேர்ந்த அவரது காதலி கிரீஷ்மா குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் கேரள மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அடைந்தது.
தூக்கு தண்டனை:
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளம்பெண் கிரீஷ்மாவிற்கு தூக்கு தண்டனை விதித்து கேரளாவில் உள்ள நெய்யாற்றிங்கரா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு ஒட்டுமொத்த கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வழக்கில் இளம்பெண் கிரீஷ்மா மற்றும் அவரது தாய்மாமா நிர்மல்குமார் குற்றவாளி என்று நீதிமன்றம் கடந்த 17ம் தேதி தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
கிரீஷ்மாவின் ரியாக்ஷன் என்ன?
நீதிமன்றம் தண்டனையை அறிவித்தபோது நீதிமன்றத்தில் இருந்த கிரீஷ்மா எந்தவித உணர்வுகளும் இன்றி சடலம் போல நின்றார். அதிர்ச்சி காரணமாகவோ அல்லது குற்ற உணர்வு காரணமாகவோ அவர் இவ்வாறு நின்று இருக்கலாம் என்று அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர். பின்னர், நீதிமன்ற வளாகத்தில் இருந்து அவரை காவல்துறையினர் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
கண்ணீர் விட்ட தாய்:
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கேட்ட உயிரிழந்த இளைஞர் ஷரோனின் தாய் கண்ணீர் விட்டு அழுதார். இந்த தீர்ப்பு குறித்து பேசிய ஷரோனின் தாய் நீதி கேட்டு நாங்கள் அழுத கண்ணீர் கடவுளுக்கு கேட்டுவிட்டது. என் அன்பு மகனுக்கு நீதி கிடைத்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவின் தாய் மாமா நிர்மலுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிரீஷ்மாவின் தாய்க்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்தது என்ன?
முன்னதாக, ஷரோனை காதலித்து வந்த கிரீஷ்மாவிற்கு வீட்டில் வேறு ஒரு வரன் பார்த்துள்ளனர். அதற்கு கிரீஷ்மாவும் சம்மதம் தெரிவிக்க, ஷரோன் தன்னை காதலித்ததால் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். அப்போது, ஷரோனை தனது வீட்டிற்கு வரவழைத்த கிரீஷ்மா அவருக்கு குளிர்பானம் வழங்கியுள்ளார்.
அந்த குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர், வீட்டிற்குச் சென்ற ஷரோன் வயிற்று வலியால் துடிக்க மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், விஷம் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது ரத்த மாதிரியை பரிசோதித்த மருத்துவர்கள் அதில் விஷம் கலந்து இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
ஷரோனுக்கு குளிர்பானம் கொடுத்தது கிரீஷ்மா என்பதை கண்டறிந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் விஷம் கொடுத்தை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.