ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டு கப்பலில் சென்ற தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை மற்றும் புன்னகாயல் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாலுமிகள் உள்ளிட்ட 17 இந்திய மாலுமிகளை மீட்டு தாயகம் கொண்டு வர ஆலந்தலை கப்பல் மாலூமிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.




இந்திய மாலுமிகள் சிறைபிடிப்பு:


கடந்த 12ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக கடற்பகுதி வழியாக மும்பை நவ சேவா துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகளை ஏற்றி வந்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த எம்எஸ்வி அரைஸ் என்ற கப்பலில் ஹெலிகாப்டர் மூலம் ஈரான் நாட்டு கடற்படை இறங்கி அதிலிருந்த 17 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 25 மாலுமிகளை சிறை பிடித்து ஈரான் நாட்டு துறைமுகத்திற்கு சிறைபிடித்து கொண்டு சென்றுள்ளது. தற்போது அந்த கப்பலிலேயே சிறை பிடிக்கப்பட்ட 25 மாலுமிகளும் உள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.




3 தமிழர்கள்:


இதில் சிறைப்பிடிக்கப்பட்ட 17 இந்திய மாலூமிகளில் மூன்று பேர் தமிழர்கள். அதில் இரண்டு மாலுமிகள் தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை மீனவ கிராமத்தை சேர்ந்த பிரைன்ஸ்டைன் கொந்தாஸ் மற்றும் புன்னக்காயல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செலேஸ்டின் மைக்கேல் ஆகியோர் என்பது தெரிய வந்தது.


இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேல் நாட்டிடையே போர் நிலவி வரும் சூழ்நிலையில் சிறைபிடிக்கப்பட்டு ஈரான் நாட்டில் வாடி வரும் தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை மற்றும் புன்னக்காயல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரண்டு கப்பல் மாலூமிகளையும் விடுவிக்க மத்திய மாநில அரசுகள் மற்றும் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆலந்தலை கிராமத்தை சேர்ந்த கப்பல் மாலுமிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதியிடம் மனு அளிக்கப்பட்டது .




தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இடையே போர்சுழல் உருவாகியுள்ளதால் சிறைபிடிக்கப்பட்ட மாலுமிகளை எந்தவித பாதிப்பும் இல்லாமல் உடனடியாக மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.