மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 3 -ம் தேதி முதல் பிப்ரவரி 7 -ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட 5 நாள் மதுவிலக்கு சோதனையில், உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 6 மதுபானக்கூடங்களுக்கு சீல் வைத்து, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன், வெளிமாநில மது மற்றும் சாராய கடத்தலில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

மதுவிலக்கு டிஎஸ்பி செய்திக்குறிப்பு 

இதுகுறித்து மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு குற்றங்களுக்கு எதிராக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்...உயர்நீதிமன்றம் அதிரடி

Continues below advertisement

5 நாட்கள் அதிரடி சோதனை 

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 3 -ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை 5 நாட்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் புதுச்சேரி மாநில மது மற்றும் சாராய கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட கீழையூரை சேர்ந்த 60 வயதான பாஸ்கர், அனந்தமங்கலத்தை சேர்ந்த 54 வயதான மணி, வசிஷ்டாச்சேரியை சேர்ந்த 75 வயதான பக்கிரிசாமி, 65 வயதான கஸ்தூரி, மயிலாடுதுறையை சேர்ந்த 30 வயதான தேவபிரசாத், 38 வயதான சுரேஷ், 22 வயதான கார்த்தி, வடரங்கத்தை சேர்ந்த 52 வயதான செந்தில், கீழவெளியை சேர்ந்த 55 வயதான கந்தன், ஆண்டிப்பட்டியை சேர்ந்த 24 வயதான சுபேந்திரன், தரங்கம்பாடியை சேர்ந்த 52 வயதான சங்கர், ஆக்கூரைச் சேர்ந்த 46 வயதான எஸ்தர் ராஜ், சீர்காழியை சேர்ந்த 74 வயதான கேசவன், கடக்கத்தைச் சேர்ந்த 24 வயதான சூரியபிரசாத், மடப்புரத்தை சேர்ந்த 57 வயதான தூண்டில் என்கிற பாலகிருஷ்ணன் ஆகிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உரிமம் பெறாத மதுபான பார்கள்

மேலும், டாஸ்மாக் மதுபானக்கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் உரிமம் இல்லாமல் இயங்கிய 6 மதுபான கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த வகையில், குத்தாலம் டாஸ்மாக் கடையில் (எண்: 5776) நடத்தப்பட்ட சோதனையில் மயிலாடுதுறை ஆலமரத்தெருவைச் சேர்ந்த 52 வயதான முத்தமிழன் கைது செய்யப்பட்டார். புத்தூர் (5628) டாஸ்மாக் கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புத்துரை சேர்ந்த 74 வயதான கேசவன் கைது செய்யப்பட்டார். மங்கைமடம் (5756) டாஸ்மாக் கடையில் நடைபெற்ற சோதனையில் தஞ்சாவூரை சேர்ந்த 39 வயதான ராஜேஷ் கைது செய்யப்பட்டார். மேலும் தேனியை சேர்ந்த பசும்பொன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கன்னியாகுடி (5782) டாஸ்மாக் கடையில் நடத்தப்பட்ட சோதனையில் அருள் என்பவர் தலைமறைவானார். தென்னலக்குடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நடராஜன் என்பவர் தலைமறைவானர். குத்தாலத்தில் உள்ள மதுபானக்கடையில் (எண்: 5777) நடத்தப்பட்ட சோதனையில் சுதந்திரவீரன் என்பவர் தலைமறைவானார். இந்த 6 கடைகளுக்கும் டாஸ்மாக் மேலாளர் பழனிவேல் அறிவுறுத்தலின்பேரில், டாஸ்மாக் வட்டாட்சியர் ஜெயபாலன் சீல் வைத்தார். மேலும், தப்பியோடிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

எச்சரிக்கை விடுத்த டிஎஸ்பி 

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கெனவே 4 சட்டவிரோத மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 6 மதுபானக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மதுவிலக்கு போலீஸாரின் தீவிர நடவடிக்கை காரணமாக சிலர் மதுபானக்கூடங்களுக்கு தற்போது உரிமம் பெற்றுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் இன்றி செயல்படும் அனைத்து மதுபானக்கூடங்களுக்கும் விரைவில் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அச்செய்திக்குறிப்பின் வாயிலாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.