சேலம் அடுத்த சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 35 வயது பார்வதிக்கும் , நாமக்கல்லைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மனஸ்தாபம் காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த பார்வதி, தனிமையில் வசித்து வந்தார்.
அப்போது, ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி புதுக்காலனி பகுதியில் வசிக்கும், 25 வயதான பூபதி என்பவருடன் பார்வதிக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் காதலித்த நிலையில், திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த கையோடு சீலநாயக்கன் பட்டியில் குடியேறி அவர்கள், அங்குள்ள கட்டுமானப்பணிகளுக்குச் சென்று குடும்பம் நடத்தி வந்தனர். அவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் பிறந்த நிலையில், முதல் கணவருக்கு பிறந்த 12 வயது மகனையும் அவர்கள் வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் தான், பார்வதி மீண்டும் நான்காவது முறையாக கர்ப்பம் தரித்தார். ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருப்பதால், நான்காவதாக குழந்தை பிறந்தால், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் தங்களை தவறாக பேசுவார்கள் என்று பயந்த தம்பதி, கர்ப்பமானதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். 8 மாத கர்ப்பிணியான பார்வதிக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டுள்ளார்.
சத்தம் கேட்டு யாராவது வந்தால், பிரச்சனை ஆகி விடும் என்று பயந்த பூபதி, தனது மனைவியை வீட்டிலிருந்து கிளப்பி வெளியே வேறு பகுதி அழைத்துச் சென்றார். நாழிக்கல்பட்டி துர்க்கையம்மன் கோயில் அருகே உள்ள மலைப்பகுதி புதர் ஒன்றுக்கு மனைவியை அழைத்துச் சென்ற பூபதி, அங்கு தானே மனைவிக்கு பிரசவம் பார்க்க தயாரானார். பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில், அது இறந்த நிலையில் பிரசவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மனைவியுடன் சேர்ந்து அருகில் உள்ள புதரில் குழி தோண்டி, அந்த குழந்தையை புதைத்தார் பூபதி.
இந்த நேரத்தில் திடீரென மனைவி பார்வதிக்கு வலிப்பு ஏற்பட்டது. துடித்துப் போன அவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். அவ்வழியாக வந்தவர்கள் இதை கண்டு, மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், பார்வதியின் சடலத்தை கைப்பற்றியதுடன், புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தையும் கைப்பற்றினர். சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக இரு சடலங்களும் அனுப்பப்பட்ட நிலையில், கணவர் பூபதியை போலீசார் கைது செய்தனர்.
தெரிந்தே உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் குழந்தை இறந்து தான் பிறந்ததா, அல்லது கொலை செய்யப்பட்டதா? பார்வதி இறப்பு, திட்டமிட்ட கொலையா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனே பிரசவம் செய்ய முயன்று, மனைவியும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம், சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.