தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகரில் உள்ள தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி, களரம்பட்டி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை துண்டு பேப்பரில் எழுதி, விற்பனை செய்து வந்தது குறித்து சேலம் மாநகர ஆணையாளருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து சேலம் உதவி ஆணையர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.



இந்த விசாரணையில் சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி, கைலாஷ், சித்தேஸ்வரன், கருப்பண்ணன், ராமு கார்த்திக் உள்ளிட்ட 8 பேர் தடை செய்யப்பட்ட கேரளா போன்ற வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை பேப்பர்களில் எழுதி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைதான 8 பேரும் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .



இந்த நிலையில்,  இரண்டு நாட்களாக சேலம் மாநகர பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கினர். இந்த சோதனையில் சேலம் மாநகர் முழுவதும் இருந்து சுமார் 31 பேர் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே லாட்டரி சிறப்பு தனிப்படை காவல்துறையினர் மாநகர் முழுவதும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை பேப்பரில் எழுதி விற்றலோ அல்லது நம்பர் லாட்டரி விற்றாலோ, விற்பவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவர் என்று சேலம் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும், வெளி மாநில லாட்டரி சீட்டுகள் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புழக்கத்தில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையத்திற்கும் லாட்டரி சீட்டு விற்பனை குறித்து சோதனை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர்களிடம் இருந்து வாங்கினாலும் அது குற்றமாகும் எனவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனவும் காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண