சேலம் மாநகர் அரியானூர் பகுதியில் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அரசு முத்திரையுடன் சைரன் வைத்த வாகனம் ஒன்று வந்துள்ளது. இந்த வாகனத்தின் வலது புற பகுதி அதிகமாக சேதமடைந்து இருந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது வாகனத்தை இயக்கி வந்த நபர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்தார். மேலும் தான் அரசு அதிகாரி என்றும் சென்னையில் கணக்கு துறையில் நிர்வாக அதிகாரியாக உள்ளதாக அடையாள அட்டையை காண்பித்துள்ளார். இதையடுத்து கொண்டலாம்பட்டி காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்த நிலையில் வாகனத்தில் இருந்து திருமால், கருப்பையா ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறிய தகவலைகேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர். அரசு அதிகாரியின் வாகனம் போல் சைரன் வைத்து தமிழ்நாடு அரசு என்ற எழுத்துடன் அரசு முத்திரையை பதித்து வாகனத்தை தயார் செய்துள்ளனர். குறிப்பாக சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று அங்கு வரும் நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாகவும், அரசு ஊழியர்களுக்கு பணி மாறுதல் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.



இதுமட்டுமில்லாமல் கணக்குத் துறை நிர்வாக அதிகாரி என்ற போலியான அடையாள அட்டையை தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் டோல்கேட்கள் அனைத்திலும் கட்டணம் செலுத்தாமல் இலவசமாகவே பயணித்துள்ளனர். சென்னை மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் மோசடி சம்பவங்களில் இருவர் ஈடுபட்டு இருக்கலாம் என்பதால் காவல்துறையினர் இருவர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கணக்குத் துறை நிர்வாக அதிகாரி என்று போலி அடையாள அட்டை வைத்திருக்கும் திருமால் என்பவர் எந்தவித தொழிலும் இல்லாமல் சுற்றித்திரிந்த நிலையில் பணி மாறுதல் மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் கருப்பையா என்ற மற்றொரு நபர் சென்னையில் மின்சார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இருவரும் சேர்ந்து மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் பல நபர்கள் ஏமாந்து இருக்கலாம் என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று சேலம் மாநகர காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.