சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கான மாணவர்கள் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர். இதனிடையில் இந்த கல்லூரிகளை குறிவைத்து விலை உயர்ந்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து திட்டமிட்ட குற்றதடுப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவை சேர்ந்த வாலிபர்களும், கல்லூரி மாணவர்களுக்கும் சின்னசீரகப்பாடி பகுதியில் தங்கிருந்து மெத்தம் பேட்டமைன் என்ற உயரக போதை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்த காவல்துறையினர் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஆலன்கே பிலிப், அமல் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் குமார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து உயரக போதை பொருட்களை வாங்கி வந்து ஒரு கிராம் ரூபாய் 3,000 என கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். கண்ணாடி இலை போன்ற ஒரு கிராம் மெத்தம்பேட்டமைன் பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை போதை இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் மூன்று பேரும் ஆட்டையாம்பட்டி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவரிடம் இருந்து மூன்று சொகுசு பைக்குகள், 35 ஆயிரம் மதிப்பிலான மெத்தம்பேட்டமைன் என்ற உயர் ரக போதை பொருள், நவீன எடை இயந்திரம் மற்றும் 2 போதை பொருட்கள் டெஸ்டிங் மெஷின் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் தடுப்பு பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதே போன்ற நடந்த மற்றொரு சம்பவத்தில், சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை செய்வதாக சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ்க்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம், ஆத்தூர் டவுன் காவல் நிலையத்தில் வந்த இளைஞர்கள், கஞ்சா போதையில் காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்டனர். காவல்துறையினர் விசாரணையில், நரசிங்கபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் வந்து கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
இதனையடுத்து நேற்று, ஆத்தூர் காவல்துறையினர் நரசிங்கபுரம், செல்லியம் நரசிங்கபுரம், செல்லியம்பாளையம், துலுக்கனூர், தென்னங்குடிபாளையம், வடக்குகாடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், காவல்துறையினரை கண்டவுடன் தப்பியோட முயன்றார். காவல்துறையினர் வாலிபரை விரட்டிப்பிடித்து இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது. 100 கிராம் எடையுள்ள கஞ்சா தூள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் நரசிங்கபுரம் நேதாஜி நகரை சேர்ந்த குணசேகரனின் மகன் ரமேஷ் (33) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவர் நரசிங்கபுரம் நகராட்சி 16 வது வார்டு அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளராக இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர், அவரை கைது செய்து, கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்