சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பழத்தோட்டம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த மைதிலி. இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருசக்கர வாகனத்தை காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மகுடஞ்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். 


டிவிஎஸ் எக்ஸ்எல்தான் எனது டார்கெட் ... வினோத திருடன் -  சிக்கியது எப்படி?


இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் மகுடஞ்சாவடி காவல் நிலையம் அழைத்து வந்த அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது அவர் ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி கூலி தொழிலாளி மாரியப்பன் என்பதும் இவர் தற்பொழுது தாரமங்கலம் பகுதியில் தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருவதாக தெரிய வந்தது. இவர் நேற்றுமுன்தினம் இரவு இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த மைதிலி என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தை திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.


மேலும் எடப்பாடி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. ​அவரிடமிருந்து 21 டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வினோத திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.