சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள அத்தனூர்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி இளவரசி. இவர்களுக்கு விக்னேஷ் மற்றும் சதீஷ்குமார் என்ற 2 குழந்தைகள் இருந்தனர். விஜயகுமார் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், வீட்டின் அருகே வசிக்கும் ஒரு வாலிபருடன், இளவரசிக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த விஜயகுமார், மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை, வழக்கம் போல் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்ட விஜயகுமார், வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். நேற்று இரவு 8 மணியளவில், அவரது வீட்டிற்கு அருகே காலியாக இருந்த செப்டிக் டேங்கில் இருந்த தண்ணீரில், விஜயகுமாரின் குழந்தைகள் இருவரும் மூழ்கி கிடந்தனர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் குழந்தைகளை மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, வெளியே சென்றிருந்த விஜயகுமாருக்கு, குழந்தைகள் இருவரும் இறந்து விட்டதும், மருத்துவமனையில் அவர்களது உடல்கள் வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது உறவினருடன் டூவீலரில் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, அத்தனூர்பட்டி அருகே, எதிரே டூவீலரில் வந்த 2 சிறுவர்கள் மீது, அவரது டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக விஜயகுமாரும், மற்றொரு தரப்பை சேர்ந்த சிறுவனும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தகாத உறவை கணவன் கண்டித்ததால், இளவரசி தனது 2 குழந்தைகளையும், செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்து விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, இளவரசியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.