காய்கறி சந்தையில் 500 ரூபாய் கள்ளநோட்டு கொடுத்த வாலிபர் - மாட்டியது எப்படி?

கள்ளநோட்டு ஆனது ஜெராக்ஸ் இயந்திரத்தில் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது என்று காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Continues below advertisement

சேலம் மாநகர் குரங்குசாவடி பகுதியில் காய்கறி வார சந்தை செவ்வாய்க்கிழமைகளில் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் காய்கறி வாங்குவதற்காக வருகை தந்துள்ளார். அப்போது ஒரு கடையில் காய்கறிகளை வாங்கிவிட்டு 500 ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். காய்கறி வாங்கியது போக மீதம் உள்ள சில்லறையை வியாபாரி அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்த வாலிபர் கொடுத்த ரூபாய் நோட்டு மீது வியாபாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த ரூபாய் நோட்டை சகவியாபாரிகளிடம் காண்பித்துள்ளார். அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்த வியாபாரிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, காவல்துறையினர் பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். 

Continues below advertisement

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த தினேஷ் (30) என்பது தெரியவந்தது. பிபிஏ பட்டதாரியான இவர் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே அவர் கடந்த ஆறு மாதமாக அந்த நிறுவனத்துக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் தினேஷ் நேற்று முன்தினம் தர்மபுரியில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு பஸ் மூலமாக வருகை தந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிக்கொண்டு கள்ள நோட்டை மாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த கள்ளநோட்டு ஆனது ஜெராக்ஸ் இயந்திரத்தில் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தினேஷை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 8000 மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். தினேஷ் கள்ள நோட்டை எங்கு கலர் ஜெராக்ஸ் எடுத்தார்? என்பது குறித்தும், வேறு யாருக்கேனும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola