கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே திப்பன அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தம்மா வயது(50).இவரது கணவர் நாகப்பன் சில ஆண்டுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் நாகப்பன் இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால், சாந்தம்மா தனது தாய் யசோதம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். யசோதம்மாவின் இளைய மகளும் திருமணமாகாமல் வீட்டில் இருந்து வருகிறார். இதனால் பரிகார பூஜை செய்ய உறவினர் ஒருவரை அணுகியுள்ளனர். அவர், கெலமங்கலத்தைச் சேர்ந்த முனிராஜ் வயது(42) என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர் மூலம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் வயது (44), கர்நாடகா மாநிலம் சர்ஜாபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் வயது (24) ஆகியோர் அறிமுகமாகி கடந்த 7ம் தேதி சாந்தம்மா வீட்டிற்கு சென்றுள்ளனர்.




அங்கு, தேங்காயை உருட்டி விட்டு பார்த்துள்ளனர். அப்போது, வீட்டிற்குள் சுமார் 15 அடி ஆழத்தில் தங்க சிலை புதையல் இருப்பதாக கூறியுள்ளனர். அதனை வெளியே கொண்டு வந்தால் பிரச்னை அனைத்தும் சரியாகி விடும் என கூறி ஆசை காட்டியுள்ளனர். அந்த புதையலை எடுக்க, பரிகார பூஜைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் என கூறி முதல் தவணையாக 55 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர்.


இதையடுத்து, நேற்று  இரவு யசோதம்மா வீட்டில் பரிகார பூஜை துவங்கியது. பூஜைக்காக கொண்டு வரப்பட்ட கோழி தலையை வாயால் கடித்து எறிந்துள்ளனர். அப்போது, பீறிட்டு வெளியேறிய ரத்தத்தை கொண்டு பில்லி சூனியம் வைக்க பயன்படுத்தும் பொம்மைக்கு பூஜை செய்துள்ளனர். தொடர்ந்து புதையல் எடுக்க குழி தோண்ட தட்சணை வைத்தால்தான் காரியம் பலிக்கும் என கூறியுள்ளனர். அதனை நம்பிய யசோதம்மா மேலும் 20 ஆயிரத்தை தட்டில் வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து கடப்பாறை கொண்டு நடு வீட்டில் குழி தோண்டியுள்ளனர்.



இதனால், நள்ளிரவு நேரத்தில் சத்தம் எழுந்துள்ளது. அதனைக்கேட்டு அதிர்ச்சிக்குள்ளான அக்கம்- பக்கத்தினர் தளி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர்  அதிகாலை நேரத்தில் அந்த வீட்டை முற்றுகையிட்டனர். உள்ளே சென்று பார்த்தபோது 5 நபர்கள் கொண்ட குப்பல் நடு வீட்டில் குழிதோண்டிக்கொண்டிருந்தனர். அவர்களை சுற்றிவளைத்து விசாரித்ததில், புதையல் இருப்பதாக கூறி யசோதம்மா குடும்பத்தை ஏமாற்றியது தெரிய வந்தது. இதுதொடர்பாக வெங்கடேசன், சந்தோஷ்குமார், முனிராஜ் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த கார்த்திக்குமார் வயது (23), சர்ஜாபுரத்தைச் சேர்ந்த முனிராஜ் வயது (52) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.


அவர்களிடமிருந்து நூல் சுற்றிய கலயங்கள், மண் சட்டிகள், மண்டை ஓடுகள், மஞ்சள் மற்றும் குங்குமம், தேங்காய், உப்பு உள்ளிட்ட பூஜை பொருட்களை கைப்பற்றினர். மேலும் அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்